வலி. மேற்கு பிரதேச சபையின் அமர்வின் போது கொந்தளித்து வெளியேறிய உறுப்பினர்கள்
வலி.மேற்கு பிரதேச சபையில் பிரயோகிக்கப்பட்ட சொற்பதத்தால் சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
46வது சபை அமர்வு இன்று உபதவிசாளர் சச்சிதானந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கூட்ட அறிக்கை வாசிப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இதயகுமார், அபிவிருத்தி திட்டங்களின் போது விழிசிட்டி பகுதியே முன்னுரிமைப்படுத்தப்படுவதாகவும், ஏனைய பகுதிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதன்போது “அவன் விசரன்” என்ற பதம் சபையில் திடீரென எழுந்தது.இதனையடுத்து குறுக்கிட்ட இதயகுமார் யார் விசரன் என்று எல்லோரிடமும் கேட்டு பாருங்கள் யார் விசரன் என்பது உங்களுக்கு புரியும் என்றார்.
இதன்போது குறுக்கிட்ட தவிசாளர் குறித்த சொற்பதத்தை எந்த சபை உறுப்பினர் பயன்படுத்தினாலும் நான் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.
இதனைதொடர்ந்து கருத்து தெரிவித்த இதயகுமார்,
"நீங்கள் மன்னிப்பு கேட்க தேவையில்லை, இந்த சொற்பதத்தினை, ஐக்கிய தேசியக் கட்சியின் சங்கானை வட்டார உறுப்பினரான குணசிறியே கூறியதாக கைகாட்டி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து எழுந்த சங்கானை வட்டார உறுப்பினர் தான் "விசரன்" என்ற சொற்பதம் பாவித்ததாகவும், எனினும் குறித்த நபரை கூறவில்லை எனவும் எனது சக உறுப்பினரோடு உரையாடும் போதே தெரிவித்ததாகவும், தெரிவித்து மேசையில் ஓங்கி அடித்து சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக நடந்ததுடன் வெளிநடப்பும் செய்திருந்தார்.
இதனைடுத்து கருத்து தெரிவித்த தவிசாளர் உங்களுடைய சொந்த கதைகள் கதைப்பதற்கு இது இடமில்லை. தகுந்த வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்ளுங்கள் என்றார்.
இதனையடுத்து குறித்த உறுப்பினருடன் உரையாடிய உறுப்பினர் தாம் கதைத்தது தவறு நாம் நமக்குள் தான் கதைத்ததாக தெரிவித்தனர்.
எனினும் ஏனைய உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்த உறுப்பினர் சபையில் நடந்து கொண்ட விதம் தவறு எனவும் அவர் தன்பக்க நியாயங்களை சபையில் சமர்ப்பித்திருக்கலாம். அவர் வெளிநடப்பு செய்தமை குற்றத்தை ஒப்புக்கொள்வது போலாகும் என்றும் தெரிவித்திருந்தனர்.