கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களை உறுப்பினர்களாக செயற்படுவதை தடைசெய்யும் வகையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து கட்டாணை ஒன்றினை பிறப்பித்துள்ளது.
திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் நேற்று(21) இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 14 நாட்களுக்கு செயற்படும் வகையில் மேற்குறித்த இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி சண்முகம் தில்லைராசனினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணத்தினை அடிப்படையாகக் கொண்டு குறித்த கட்டாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கு விசாரணை
நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 101(2) இல் உள்ள ஏற்பாடுகள் மற்றும் அதே சட்டத்தின் ஏனைய பொதுவான ஏற்பாடுகளுக்கு அமைய பொதுச்சபையின் ஆயுட்கால உறுப்பினர் செ.க.விஜயநாதன், முன்னாள் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபை உறுப்பினரும் பொதுச்சபையின் ஆயுட்கால உறுப்பினருமான சி.ஜெயசங்கர் ஆகியோரால் கோணேஸ்வர ஆலய நம்பிக்கை பொறுப்பாளர்கள்சபையின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட 29 பேரை எதிர்மனுதாரர்களாகவும், கு.ஹேமச்சந்திரா, து.தவசிலிங்கம் ஆகியோரை 2வது, 3வது மூல எதிர் மனுதாரர்களாகவும் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது 1ஆம், 2ஆம், 3ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் எதிர்மனுதாரர்கள் மேற்குறித்த கோணேஸ்வர ஆலயத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபைக்கு தலைவர், செயலாளர், பொருளாளர், உபதலைவர் மற்றும் உப செயலாளராக செயற்படுவதையும் அதேநேரம் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் நிறைவேற்றுக் குழுவாக செயற்படுவதையும் உடனடியாக தடை செய்வதற்கான கட்டாணையும், 1 தொடக்கம் 23 வரையிலான எதிர்மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டவர்கள் கேணேஸ்வரர் ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளர்சபை உறுப்பினர்களாக செயற்படுவதையும் உடனடியாக தடை செய்வதான கட்டாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருகோணமலை பிரதேச செயலக செயலாளர் அல்லது நகரசபையின் செயலாளரை தலைவராகவும் கொண்ட ஏழுபேரை உள்ளடக்கிய இடைக்கால நிர்வாக சபையை நியமிப்பதாகவும், குறித்த இடைக்கால நிர்வாக சபைக்கு ஆலோசனை வழங்குவதற்காக 5 பேர் கொண்ட உறுப்பினர்களை உள்ளடக்கியதான ஆலோசனை சபை ஒன்றை அமைப்பதான கட்டளையும் பிறப்பிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |