சம்பந்தனை இழிவுபடுத்திய சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி!சுமந்திரன் கடும் எதிர்ப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற ஓர் காணொளி பதிவு குறித்து சிறப்புரிமை கேள்வியை எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற ஊழியர்களின் உதவியுடன் இரா.சம்பந்தன் தனது நாடாளுமன்ற ஆசனத்தில் வந்து அமர்வதை உறுப்பினர் ஒருவர் காணொளி பதிவு செய்து வெளியிட்ட விடயமானது,சம்பந்தனின் சிறப்புரிமையை மீறும் விடயம் எனவும், இது தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்.ஏ சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் கடந்த நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற ஊழியர்களின் உதவியுடன் தனது நாடாளுமன்ற ஆசனத்தில் அமர்ந்தார்.
இந்த காட்சியை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னுடைய கைத்தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளதோடு, அதனை சமூகவலைத்தளத்தினூடாக பகிரப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட எம்.ஏ சுமந்திரன், இரா. சம்பந்தனின் சிறப்புரிமையை மீறும் வகையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.