இந்தியா- இலங்கைக்கிடையில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தல்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சூரிய சக்தி திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.
திருகோணமலை மாவட்ட பொருளாதார அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு திட்டங்களின் ஒப்பந்தம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சூரிய சக்தி திட்டத்திற்கான எரிசக்தி திட்டம் மற்றும் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதற்காக ஐபிஎல் மற்றும் லங்கா பே இடையே வலையமைப்பு ஒப்பந்தம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை கையெழுத்திடப்பட்டன.
முதலாம் இணைப்பு
இலங்கையில் பலதரப்பட்ட திட்டங்களை ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தாம் சந்தித்துப் பேசியதாக இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.
இதன்போது 500 மெகாவாட் காற்றாலை திட்டம், கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையத்தின் தற்போதைய மேம்பாடு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிபுணத்துவத்தை விரிவுபடுத்துவது குறித்து விவாதங்கள் நடந்ததாக அதானி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்திய விஜயத்தின் போது கலந்துரையாடல்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றுள்ள சந்தர்பத்திலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள பூனேரியில் காற்றாலை மின் திட்டங்களை தொடங்க அதானி குழுமத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூனேரியில் 234 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை திட்டங்களுக்கும், 500 மில்லியன் டொலர் முதலீடு, மற்றும் இலங்கையின் எரிசக்தி துறையிலும் கொழும்பு மேற்கு கொள்கலன் முனையத்திலும் அதானி குழுமத்தின் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |