இந்தியாவில் முக்கிய சந்திப்புக்களில் மிலிந்த மொரகொட (Photos)
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
புதுடில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சிலே நேற்று (31.01.2023) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
ஜெய்சங்கரின் இலங்கை விஜயம்
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் ஆகியோர், ஜெய்சங்கரின் அண்மைய இலங்கை பயணத்தின் பின்தொடர்தல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, இந்த சந்திப்பின்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவிகளை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை முயற்சித்து வரும் பின்னணியில், இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான இருதரப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் (இந்து சமுத்திர பிராந்தியம்) புனித் அகர்வால் மற்றும் இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் நிலுக கதுருகமுவ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்திய பாதுகாப்பு படைகளின் பிரதானியுடன் சந்திப்பு
உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கடந்த திங்களன்று இந்திய பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் அனில் சௌஹானையும் டில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இரு நாடுகளின் பாதுகாப்பு படைகளுக்கு இடையே தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் பாதுகாப்பு நலன்களை பகிர்ந்துகொள்வது குறித்து சுமுகமான கலந்துரையாடல் இதன்போது நடைபெற்றது.
உயர்ஸ்தானிகர் மொரகொட, இலங்கையின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பல ஆண்டுகளாக உலகத்தரம் வாய்ந்த தொழில்முறை பயிற்சிகளை வழங்கிய இந்திய படைகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு பிரதானியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம்
கடந்த மாதம் 20 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கையிலுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் வகையில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியிருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
