எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த இந்திய உப ஜனாதிபதி
இலங்கைக்குத் தனது முதலாவது உத்தியோகபூர்வ இருதரப்பு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம்(19/04/2026) இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல் மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.
நாடுகளுக்கு இடையிலான நீண்ட கால கூட்டுறவு
குறிப்பாக, இரு தேசங்களுக்கும் பயனளிக்கக்கூடிய நடைமுறை ரீதியான வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கையும் இந்தியாவும் வெறும் அண்டை நாடுகள் மட்டுமல்ல. பொதுவான வரலாறு, சவால்கள் மற்றும் பொதுவான எதிர்காலத்தைக் கொண்ட உண்மையான கூட்டாளர்கள் என்று இச்சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நீண்டகாலக் கூட்டுறவின் பலன்களை அனைத்துக் குடிமக்களும் சென்றடையச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதற்காக அதீத அபிலாஷைகள், உறுதியான நோக்கம் மற்றும் நம்பிக்கையுடன் இரு நாடுகளும் இணைந்து முன்னேற வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
