நீதிபதிகளின் வயது அதிகரிப்பு குறித்த யோசனை! எதிராக வாக்களிக்கப்போவதாக தெரிவிக்கிறார் சிறீதரன் எம்.பி
நீதிபதிகளின் வயதை அதிகரிப்பது தொடர்பான யோசனை நாடாளுமன்றத்திற்கு வரும் போது அதற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கோணாவில் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் இன்று (14.09.2026) பிற்பகல் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வட்டாரபிரதேச சபை உறுப்பினர் ச.சிவயோகலக்சுமி உள்ளிட்ட பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.
இதில் வைத்து கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நீதிபதிகளின் வயது அதிகரிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கிற நீதிபதிகளுடைய வயதை கூட்டுகிறார்கள். 62 வயதோடு இருக்கிற நீதிபதியை 67 வயது வரைக்கும் கொண்டு வருகிறார்கள்.
மேல்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் - இரண்டு நீதிமன்றங்களுக்கும் வருகின்ற நீதிபதிகளின் வயதை 62 வயதிலிருந்து 67 வயது வரைக்கும் கொண்டு வர தீர்மானித்திருக்கிறார்கள்.

இதற்கு பல எதிர்ப்புகள், பல இராஜதந்திரிகள் மத்தியிலும் இருக்கிறது. அதைவிட வழக்கறிஞர்கள் சங்கமும் அதை கடுமையாக எதிர்க்கிறது. எதிர்க்க எதிர்க்க நாடாளுமன்றத்திலே அது விவாதத்திற்கு வருகிறது. வருகின்ற 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் அது விவாதத்திற்காக வருகிறது.
வாக்களிப்பு
விவாதத்திற்கு வருகின்ற பொழுது, நாங்கள் அதனை எதிர்த்து வாக்களிப்பதாக தீர்மானித்திருக்கிறோம். அந்த திருத்தத்திற்கு ஆதரவு இல்லை. அப்படி என்றால், இலங்கையில் இருக்கிற அனைத்து ஊழியர்களுக்கும் 65 வயதாக ஆக்குங்கள், பிரச்சினையில்லை.
ஆனால் அரசாங்கம் யாரை மட்டும் கொண்டு வர முயற்சிக்கிறது என்றால் நீதிபதிகளை. தங்களுக்கு ஏற்ற நீதிபதிகளை நியமித்து, தங்களுக்கு ஏற்ற தீர்ப்புகளை வழங்க முயற்சிக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படப் போவது நாங்கள்தான் என குறிப்பிட்டுள்ளார்.