அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சாத்தானின் சங்கம்
மருத்துவர்களின் இடமாற்றங்களுக்கு அரசியல் அழுத்தங்கள் இருக்கவில்லை எனவும் அதனை ஒரு மாஃபியா அமைப்பு தனது பிடிக்குள் வைத்திருந்தது எனவும் அரச மருத்துவ அதிகாரிகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குறித்த மாஃபியா அமைப்பிடம் இருந்து மருத்துவர்களை மீட்டு சுகாதார அமைச்சர் சில மாற்றங்களை செய்துள்ளதாகவும் தொடர்ந்தும் அந்த மாஃபிய சங்கத்திடம் சிக்காது, அமைச்சர் தனது அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்துவார் என எதிர்பார்ப்பதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் ஒன்றியத்தின் ஊடக செயலாளர் மருத்துவர் நிரோஷன பிரேரத்ன (Dr.Niroshana premaratne) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நீதிமன்ற தடையுத்தரவு நடைமுறையில் இருக்கும் போது எவ்வித சட்ட அனுகூலமும் இன்றி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சூழ்ச்சிகரமான சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
90 வீதமான அரச மருத்துவர்கள் அந்த சங்கத்துடன் இல்லை. இதுவரை காலமும் மருத்துவ நிர்வாகத்தை தமது பிடிக்குள் வைத்துக்கொண்டு இடமாற்றங்கள் உட்பட அனைத்தையும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமே மேற்கொண்டு வந்தது.
இதன் மூலம் நாட்டுக்கு சேவையாற்றும் அப்பாவி மருத்துவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றங்களை வழங்கும் போது அரச சேவைகள் ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கு அமைய உரிய கட்டளையின்படி அவை சரியாக நடக்க வேண்டுமே அன்றி, ஒரு மாஃபியா அமைப்பின் கீழ் அதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.
அனுருத்த பாதெனிய தயரித்த தேசிய சம்பள கொள்கையிலும் மருத்துவர்களுக்கு அநிதியே இழைக்கப்பட்டது. பாதெனியவுக்கு கொள்கைகளை உருவாக்க முடியாது.
எனினும் அனைத்துக்கும் தான் நிபுணத்துவம் பெற்றவன் என்று அவர் எண்ணுகிறார். மண், காய்கானிகள், இலை கஞ்சி, சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் போன்றுக்கும் நிபுணத்துவம் பெற்றவர் என அவர் நினைக்கின்றார். இவர்களின் செயலால் விவசாயிகள் உட்பட பொதுமக்கள் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களிடம் ஆலோசனை பெற்று செயற்பட்டமைக்காக அரசாங்கத்தின் மீதும் நாங்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றோம்.
மக்களை பலியெடுத்து எவ்வித காரணமும் இன்றி அநீதியான முறையில் சேவைப் புறக்கணிப்பை மேற்கொண்டு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சாத்தானின் சங்கம் எனவும் மருத்துவர் நிரோஷன பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.