முள்ளிவாய்க்கால் இறுதிப் போர்க்கள முன்னாள் மருத்துவப் போராளியின் நினைவுகள்
முள்ளிவாய்க்கால் நினைவு நாளினை நினைவில் கொள்ளும் பெரு முயற்சியும் அதன் வலிகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதில் வெற்றி பெற்றுவிடும் துடிப்போடும் போராடுகின்ற நிலையில் முள்ளிவாய்க்கால் போராட்டக் களத்தில் தன் நினைவுகளை மீட்டிப் பார்த்திருந்தார் மருத்துவ பணிகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் போராளியொருவர்.
களமருத்துவத்தில் சில காலம் பயணித்திருந்த தனக்கு முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் பொது மக்களிடையே மருத்துவப்பணியினை செய்து கொள்ள வாய்ப்பேற்பட்டிருந்தமை மகிழ்ச்சியே என முள்ளிவாய்க்காலை நினைவு கூர்ந்திருந்தார்.
பொதுமக்களுக்கான மருத்துவ சேவை
முன்கள மருத்துவத்தில் இருந்து பணி மாற்றப்பட்டிருந்த நிலையில் இறுதிப்போரின் உக்கிரத்தினால் கட்டமைப்புக்கள் கலைக்கப்பட்டுக் கொண்டிருந்த போது பலர் ஊதிரிகளாக சிதறிப்போகும் நிலை தோன்றியிருந்தது.
மே மாதம் பிறந்தது முதல் பொது மக்களிடையே மருத்துவத்துக்கான தேவையினளவு அதிகம் உணரப்பட்டது.
காயமடையும் பொது மக்களுக்கான வைத்தியசாலை வசதிகள் குறைந்து சென்றது மக்களிடையே உயிரிழப்புக்களின் அளவினை அதிகரிக்கச் செய்யும் என்ற அச்சம் மேலோங்கியது.
மருத்துவப் போராளிகளிடம் இருந்து பெற்றிருந்த சிறிதளவு மருந்துகளைக் கொண்டு காயங்களுக்கான ஆரம்ப சிகிச்சையினை மேற்கொண்டு குருதியிழப்பினை தடுத்ததோடு கிருமித் தொற்றினை இல்லாது செய்து கொள்ள முயற்சித்திருந்தேன் என அவர் தன் முயற்சியின் நினைவுகளைப் பகிர்ந்திருந்தார்.
சிறிய காயங்களை ஆற்றக்கூடிய மருந்துகளை மிகச்சொற்பமாக பயன்படுத்தி பலரது காயங்களை மாற்ற முடிந்திருந்தது.காயம் பட்ட பொதுமக்களை அவரவர் பதுங்குகுழிக்குள்ளேயே பராமரிக்க வேண்டிய சூழல் இருந்தது.
ஒவ்வொரு இடமும் மாறிச் சென்று ஒவ்வொரு பதுங்கு குழிகளினுள்ளும் இருக்கும் காயப்பட்டவர்களை சிகிச்சையளிக்க முயற்சிக்கப்பட்டது.இந்த முயற்சியின் போது என்னுடைய குழுவில் இருந்த பலரை இழக்க நேர்ந்திருந்தது.அது துயரமிக்க நிகழ்வாக இருக்கின்றது.என மக்களுக்காக சிகிச்சையளித்த போது தான் எதிர் கொண்டிருந்த சவாலை அவர் குறிப்பிட்டார்.
உங்கள் குழுவைச் போன்று முள்ளிவாய்க்காலில் பல குழுக்கள் மருத்துவப் பணியில் ஈடுபட்டிருந்தனரா என்ற கேள்விக்கு பதிலளித்த போது அவர் " குறுகிய நிலப்பரப்புக்குள் கொள்ளளவிற்கு மீறிய மக்கள் கூட்டத்திடையே எங்கள் குழுவைப் போன்று மற்றொரு குழுவும் இயங்கியிருக்கலாம்.ஆனாலும் அதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவாகவே இருந்தன.எத்தனை மருத்துவக் குழுக்கள் மக்களிடையே மருத்துவப் பணியினை செய்ய முற்பட்டாலும் மருந்துகளை வைத்தியசாலைகளோ அல்லது விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவிடமிருந்தோ தான் பெற வேண்டும்.அவர்களிடம் பல குழுக்களுக்கு மருந்துகளை வழங்க போதியளவு மருந்துகள் இறுதி நேரத்தில் இருக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
களத்தில் உருவாக்கப்பட்ட தாதியர்
களமருத்துவத்தில் ஆரம்ப சிகிச்சையின் பிரதான நோக்கங்களில் இருந்து எங்கள் அணியின் நோக்கம் வேறுபட்டதாக இருக்கவில்லை.
பின்கள மருத்துவ தளங்களுக்கு போராளிகளை அனுப்புவது போன்றே மக்களையும் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டிய சூழலை உணர்ந்திருந்தேன். எனினும் மக்கள் இருந்த இடங்களில் இருந்து அவர்களை வைத்தியசாலைக்கு அனுப்புவது கடினமாக இருந்தது.அவ்வாறு அனுப்பும் போது மீண்டும் காயப்பட்ட பல பொதுமக்களும் உண்டு.சிலர் கொண்டு போகும்போது காயப்பட்டு இறந்துவிட்ட சம்பவங்களையும் எங்கள் அணி எதிர்கொண்டிருந்தது.
மருத்துவப் போராளிகளை பயன்படுத்த முடியாத சூழலில் மக்களிடையே தன்னார்வமாக செயற்படக் கூடிய இளைஞர் யுவதிகளை இணைத்து அவர்களை குழுக்களாக்கியிருந்தேன். முதலுதவிச் சிகிச்சை பற்றி அதிகமானோருக்கு முன்னறிவு இருந்தது.
காயங்களின் தன்மை மற்றும் அவற்றை சுத்தம் செய்யும் முறை அதற்கான தேவை என எல்லாவற்றையும் களச்சூழலிலியே எடுத்துரைத்து பயிற்றுவித்திருந்தேன்.
காயப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக செல்லும் போது ஒருவர் அல்லது இருவராக அழைத்துச் சென்று காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கும் போது அவர்களை உதவியாளர்களாக கொண்டு அவர்களுக்கு பயிற்சிகளை அளிப்பதால் விரைவாக செயற்பட முடிந்திருந்தது என முள்ளிவாய்க்கால் துயரத்தின் போது தங்களின் தீரமிகு செயற்கரிய செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
பயிற்றப்பட்டவர்கள் தனித்து இயங்கக் கூடிய நிலையினை இரண்டு நாட்களுக்குள் எட்டிவிட்டது அன்றைய சூழலில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பின்னர் இன்னும் பல புதியவர்களை அவர்களுடன் இணைந்து செயற்பட ஏற்பாடு செய்திருந்தேன்.
எங்களிடம் மருந்துகள் மிகவும் குறைவாகவே இருந்திருந்தது.போராளிகளிடம் இருந்தும் வைத்தியசாலைகளில் இருந்தும் எங்கள் குழுவின் செயற்பாடுகளை எடுத்தியம்பி மருந்துகளை பெற்றிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
உடலில் ஏற்பட்டிருந்த 26 காயங்கள்
முள்ளிவாய்க்கால் காளி கோவிலுக்கு அண்மையில் காயப்பட்ட பொதுமகன் ஒருவருக்கு மூன்று நாட்களுக்கொரு முறை மருந்து கட்டும் சூழல் ஏற்பட்டிருந்தது.
புதிதாக களத்திடையில் தாதியாக பயிற்றப்பட்டு இருந்தவர் தான் அந்த சிகிச்சையை மேற்கொண்டிருந்தார். உடலில் 26 இடங்களில் சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்ததாக அவர் விபரித்திருந்தார்.
குண்டுச் சிதறல்களால் ஏற்பட்ட காயங்களாக அவை இருந்தன.எந்த வைத்தியர்களினதும் மேற்பார்வை அப்போது தமக்கு கிடைத்திருக்க வில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பெரிய காயங்கள் ஏற்பட்டிருந்தவர்களை மட்டும் விரைவாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தோம்.
பெரும் துயரம் நிகழ்ந்த முள்ளிவாய்க்காலில் தங்கள் பணி பெருமழையின் ஒரு சிறு துளியளவே என அவர் குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.
இருகால்களையும் இழந்த சிறுவன்
ஏறிகணைத் தாக்குதலால் இரு கால்களையும் முழங்காலுக்கு கீழே இழந்த சிறுவன் ஒருவனுக்கு அதிகளவு குருதியிழப்பு ஏற்பட்டிருந்தது.
முள்ளிவாய்க்காலில் உள்ள பாடசாலை ஒன்றில் அப்போது வைத்தியசாலை இயங்கிக் கொண்டிருந்தது.அந்த வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டிருந்த அந்த சிறுவனுக்கு அவசரமாக குருதி ஏற்ற வேண்டி சூழல் வைத்தியர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
அந்த சூழலில் A+ வகைக் குருதியுடைய அந்தச் சிறுவனுக்கு தங்கள் குழுவில் இருந்தவர்களில் O+ வகை குருதி கொண்ட இருவரால் குருதிக்கொடை செய்யப்பட்டிருந்ததாக முள்ளிவாய்க்காலில் மக்களிடையே மருத்துவப்பணியினை முன்னெடுத்து இருந்த அந்த முன்னாள் போராளி விபரித்திருந்தார்.
தங்களால் குருதிக்கொடையளிக்கப்பட்ட இரு கால்களையும் இழந்திருந்த அந்த சிறுவனை பதினைந்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஒரு அரச அலுவலகத்தில் அரச உத்தியோகத்தராக கடமையாற்றும் போது சந்திக்க முடிந்திருந்தது.அன்றைய தங்களின் போராட்டம் இன்றும் உயிர்ப்போடு இருப்பதால் அந்த நொடி தான் பெருமைகொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
2008 மார்கழியில் தொடங்கிய தங்களின் பயணம் 2009 மே 16 வரை தொடர்ந்திருந்தது.இந்த முயற்சியில் தங்கள் குழுவில் 5 தன்னார்வலர்களை இழந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.மருந்துகள் கிடைக்கும் வரை தாங்கள் தொடர்ந்து வேலை செய்திருந்தோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
உயிர் காக்கப் போராடும் சூழலில் இன்று
முள்ளிவாய்க்காலில் மக்களிடையே மருத்துவப்பணியினை மேற்கொண்டிருந்த இருவரைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.
கடுமையான போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது தங்களின் உயிரையும் மதிக்காது காயப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் அதிக அக்கறையோடு செயற்பாட்டிருந்தனர் என முள்ளிவாய்க்காலில் காயமுற்றிருந்து இவர்களால் சிகிச்சையளிக்கப்பட்ட ஒரு இளைஞர் அவர்களைப்பற்றி தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
தேவிபுரத்தில் இருந்து இரணைப்பாலை ஊடாக மாத்தளனுக்கு தன்னை கொண்டு சேர்த்தது அவர்கள் தான் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அடுத்தவர் உயிரைக் காத்து வாழ்வதைக் கொடுத்தவர்கள் இன்று தங்கள் வாழ்வுக்காக அன்றாடம் பெரும் சுமையை சுமந்தவாறு வாழ்ந்து வருகின்றனர்.
புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து தாயகத்திற்கு கிடைக்கும் உதவிகளில் இவர்களை சென்றடைந்த உதவிகளாக ஒன்றைக் கூட தான் காணவில்லை என யாழ்ப்பாணத்தில் வாழும் மருத்துவப் பணியாளராக முள்ளிவாய்க்காலில் தன்னார்வமாக செயற்பட்ட ஒருவரின் இன்றைய வாழ்வு பற்றி சமூக ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
உதவிகளுக்காக எதிர்பார்த்து காத்திருக்காமல் அவர்கள் தங்கள் சொந்த முயற்சியை நம்பி வாழ்ந்துவருவதை அவதானிக்க முடிகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்றைய சூழலில் முள்ளிவாய்க்கால் துயரங்களை மீண்டும் ஒரு முறை நினைத்து அதில் இன்னுயிரை இழந்துவிட்ட சொந்தங்களை நினைவு கொள்ளும் போது அந்த சவால் மிக்க சூழலை எதிர்கொண்டு மக்களுக்கு மகத்தான சேவையினை செய்து விட்டு இன்றும் மக்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மனிதர்களை நினைவில் கொண்டு மதிப்பளிக்கும் போது மனித நேயம் மாண்புறும் என்பது திண்ணம்.
வைத்தியசாலைகளில் உள்ள கவனக்குறைவு
போர் நெருக்கடிக்கு மத்தியில் இருந்த குறைந்தளவு மருத்துவ வசதிகளைக் கொண்டு பல உயிர்களை காத்துக்கொள்ள முடியுமென்றால், அதற்காக அன்றைய சூழலில் செயலாற்ற முடியுமென்றால் இன்றைய சூழலில் அரச வைத்தியசாலைகளில் ஏற்படும் கவனக்குறைவுகளை தவிர்க்க முடியும் என்பது சாத்தியப்பாடுமிக்க விடயமாகும்.
உரிய தரப்பு அதிகாரிகள் மட்டுமல்லாது பணியாளர்களும் கூடவே கவனமெடுத்து தவறுகளை இயன்றளவில் சரி செய்துகொண்டு பயணிக்க எத்தனிக்க வேண்டும்.
மனிதநேயமிக்க மருத்துவ சேவையினை நோயாளர்களின் நலன் கருதி பற்றுமிக்க தொழிலாக மேற்கொள்ள முற்பட்டால் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என நிகழ்வுகள் தொடர்பில் கருத்துக் கேட்ட போது சமூக விட கற்றல்களில் ஈடுபட்டுவரும் நண்பர் ஒருவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தமையும் இங்கு நோக்கத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |