கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆக்கபூர்வமான செயற்பாடுகள் தேவை: ரிஷாட் எம்.பி வலியுறுத்தல்
வடக்கு, கிழக்கு உட்பட புத்தளம் ஆகிய பிரதேசங்களில் வாழும் கடற்றொழிலாளர்கள், விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (06.12.2022) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, புல்மோட்டை, வாழைச்சேனை, கல்முனை, நிந்தவூர், சாய்ந்தமருது, ஒலுவில், பொத்துவில், புத்தளம் மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளில் அதிகமாக வாழும் கடற்றொழிலாளர்கள் பலர், தொலைபேசியில் தொடர்புகொண்டு, கடற்றொழிலில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தெரிவித்தார்கள்.
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை
தற்போது 430 ரூபாவுக்கு மண்ணெண்ணெய் வாங்கி கடற்றொழிலை மேற்கொள்கின்றனர். ஆனால், ஒரு கிலோ மீனை 400 ரூபாவுக்கு விற்பனை செய்யும் போது, இந்தத் தொழிலில் ஏற்படும் நட்டத்தை சுட்டிக்காட்டினார்கள்.
இதுதொடர்பில், கடற்றொழில் அமைச்சர் அரசாங்கத்துடன் பேசி, கடற்றொழிலாளர்களுக்கு சகாய விலையில் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கும் போதுதான் அவர்களது எதிர்காலம் பாதுகாக்கப்படும்.
தற்போது கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் பல இந்தத் தொழிலை நிறுத்தி வருகின்றனர். சிலர் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாமல் அவதியுறுகின்றனர்.
அதேபோன்று, இராஜாங்க அமைச்சர் பேசும்போது, பல்வேறு வீடமைப்புத் திட்டங்கள், அபிவிருத்தித் திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாக கூறினார்.
ஆனால், எமது பகுதிகளில், அவ்வாறான விடயங்கள் அவ்வளவாக நடைபெறுவதில்லை என்பதை கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கடற்றொழில் அமைச்சர் எமது மாகாணத்தை சேர்ந்தவர் என்ற வகையில், வடக்கு, கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
அதேபோன்று, மன்னார், வங்காலை பிரதேசத்தில் கடலரிப்பு ஏற்பட்டு, கடல்நீர் ஊருக்குள் புகுந்து முக்கியமான கிராமம் அழிந்துபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
கடலணைகள் அமைப்பதன் மூலமே இதனை தடுத்து நிறுத்த முடியும். எனவே, அமைச்சர் அவர்கள் இந்த விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
அதேபோன்று, நிந்தவூர் பிரதேசத்திலும் கடலரிப்பினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மக்களின் விடயத்திலும் நீங்கள் சிரத்தை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
சுற்றுலாத்துறைக்கு பேர்போன பொத்துவில் பிரதேசம் கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே, இப்போதே அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள்.
அதேபோன்று, கல்பிட்டி துறைமுகத்துக்கும் முகத்துவாரத்துக்கும் இடையில் உள்ள
பாலம் ஒன்று உடைந்திருப்பதனால் மீனவச் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாலம் அமைக்கும் திட்டத்தின் கீழ், அதன் நிர்மாணப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதனால் அந்தப் பிரதேச மக்களும் கஷ்டப்படுகின்றனர்.
இந்த விடயத்திலும் நீங்கள் அக்கறை செலுத்தி, கடற்றொழிலாளர்களின் அன்றாட ஜீவனோபாயத்துக்கு உதவ வேண்டும்.
கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, வாழைச்சேனை ஆகிய இடங்களில் ஆழ்கடலில் கடற்றொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.
உங்களை சந்தித்தபோது சில வாக்குறுதிகளை வழங்கியுள்ளீர்கள்;. கல்முனை, சாய்ந்தமருது கடற்றொழிலாளர்கள் ஐஸ் நிலையம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அங்கு எண்ணெய் நிரப்பும் நிலையங்களும் இல்லை.
மேலும் வங்காலை, சிலாவத்துறை போன்ற இடங்களிலும் இதேபோன்ற பிரச்சினைகள் நிலவுகின்றன. எனவே, இந்தத் துறைகளுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் தொடர்புகொண்டு, கடற்றொழிலாளர்களின் கஷ்டங்களை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்.
விவசாயத்துறையில் வீழ்ச்சி
இந்த உயர்சபையில் பேசிய விவசாயத்துக்கு பொறுப்பான முன்னாள் அமைச்சர் பெரிய வீரர் போன்று உரையாற்றினார்.
இவர்கள் விவசாயத் தொழில் தொடர்பில் பிழையான முடிவுகளை எடுத்ததனால்தான், இந்த நாடு இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
கடன்காரராகவும் கையேந்துபவர்களாகவும் நாம் தள்ளப்பட்டமைக்கு, இவர்களின் பிழையான கொள்கைககளே பிரதான காரணம்.
எனினும். தற்போதையே அரசு விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனினும், அது நூறு வீதம் முழுமையடயவில்லை.
எனவே, அதனையும் முறையாகச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன். கிருமிநாசினியின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அவற்றை சாதாரண, நியாயமான விலைக்கு வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று, மன்னாரில் கட்டுக்கரைகுளம், வியாயடிக்குளம், வவுனியாவில் பாவற்குளம் ஆகிய குளங்களை புனரமைத்து, விவசாயிகளுக்கு போதிய நீர் வசதிகளை செய்துகொடுங்கள்.
இந்தக் குளங்களை புனரமைப்பதற்கான முதற்கட்ட நிதியை ஒதுக்கி, அவசரமாக இதனை மேற்கொள்ளுங்கள்.
இந்த சபையிலே ‘ஹெட் ஓயா’ திட்டம் பற்றி பேசப்பட்டது. அதனை முன்னெடுப்பதாகக் கூறியிருக்கின்றீர்கள். அதனை நடைமுறைப்படுத்தினால் பொத்துவில் பிரதேச மக்கள் பெரிதும் நன்மையடைவதோடு, நாட்டின் பொருளாதார விருத்திக்கு அந்தப் பிரதேசம் கைகொடுக்கும் என உறுதியாகக் கூறுகின்றேன்.
அத்துடன், அம்பாறை, வட்டமடு காணிப் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை.
சுமார் 400 ஏக்கர் அளவிலான இந்த விவசாயக் காணிகள் பல வருடங்களாக வனபரிபாலன திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதனை விடுவித்து, விவசாயிகளுக்கு வழங்குங்கள்.
அதேபோன்று, மன்னார், வவுனியா உள்ளிட்ட இன்னும் பல பிரதேசங்களிலும் வனபரிபாலன திணைக்களத்தினால் கபளீகரம் செய்யப்பட்டுள்ள விவசாயக் காணிகளை விடுவித்து, மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
