பங்களாதேஷை உலுக்கும் தட்டம்மை: 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி!
பங்களாதேஷில் வேகமாகப் பரவி வரும் தட்டம்மை நோய் பாதிப்பினால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அந்நாட்டு அரசு அவசரக்கால தடுப்பூசி முகாம்களைத் தொடங்கியுள்ளது.
கடந்த மார்ச் 15ஆம் திகதி முதல் சுமார் 7,500 பேருக்கு தட்டம்மை பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களில் 900 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது 2025-ஆம் ஆண்டு பதிவான 125 பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் மிகப் பெரிய உயர்வாகும்.உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.
தடுப்பூசி தட்டுப்பாடு
வழக்கமாக ஒன்பது மாதக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்படும் நிலையில், தற்போதைய பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கினர் ஒன்பது மாதத்திற்கும் குறைவான வயதுடையவர்கள் எனச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கொவிட் பெருந்தொற்று மற்றும் 2024-இல் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் 2020-க்குப் பிறகு நடத்தப்படவில்லை.இதுவே இந்த திடீர் நோய் பரவலுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
மேலும், புதிய தடுப்பூசி கொள்முதல் முறையில் ஏற்பட்ட சிக்கல்களால் நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
விழிப்புணர்வு
தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த அவசரத் தடுப்பூசி முகாம் 30 துணை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான சுமார் 1.2 மில்லியன் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தலைநகர் டாக்கா மற்றும் ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் உள்ள காக்ஸ் பஜார் பகுதிகளில் தீவிரக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
தட்டம்மை என்பது காற்றின் மூலம் பரவக்கூடிய தீவிரத் தொற்று நோய் என்பதால், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என யுனிசெஃப் எச்சரித்துள்ளது.