போராட்டத்தை வன்முறைகள் மூலம் அடக்குவது ஆபத்திற்கே வழிவகுக்கும் : சந்திரகுமார்
காலிமுகத்திடல் போராட்டத்தின் விளைவாகவே நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவானது. புதிய ஜனாதிபதி தெரிவாகி பதவியேற்க முடிந்தது.
எனவே அந்த அமைதியான போராட்டத்தை வன்முறைகள் மூலம் அடக்குவது ஆபத்தான பாதைகளை திறப்பதற்கே வழிவகுக்கும் என சமத்துவகட்சியின் பொதுசெயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதியின் ஆட்சிமுறைமை
பொருளாதாரப் பின்னடைவையும் அதற்கு காரணமான அரசியல் குறைபாடுகளையும் நீக்கம் செய்து புதிய முறைமையை நடைமுறைப்படுத்த வேண்டியது இலங்கைத்தீவுக்கு மிக அவசியமானதாகும்.
இதனை வலியுறுத்தி அகிம்சை வழியில் போராட்டத்தை நடத்தி வருகின்ற காலிமுகத்திடல் இளைய சக்தி மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை தாக்குதல்கள் கண்டனத்துக்குரியன.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி நாட்டில் புரையோடிப்போயுள்ள பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கும் நிலைபேறான அரசியல் பொருளாதார கொள்கைகளை கொண்டுவரவும் முயற்சிக்க வேண்டும். இதனை வலியுறுத்தியே இளைஞர் போராட்டங்களும் கடந்த நூறு நாள்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்றன.
காலிமுகத்திடல் போராட்டத்தின் விளைவுகள்
அவர்களின் போராட்டத்தின் விளைவாகவே நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன்படி,புதிய ஜனாதிபதி தெரிவாகி பதவியேற்க முடிந்தது. எதிர்கால அரசியல் தலைவர்களாக வந்தாகவேண்டிய இந்த இளைஞர் சக்தியே ஒருங்கிணைத்தது.
அவர்களிடமிருந்து பொருத்தமானதும் நேர்நிலையானதுமான அபிப்பிராயங்களையும் செயற்றிட்டங்களையும் பெற்று நாட்டின் முன்னேற்றத்துக்கான பங்காளிகளாக அவர்களையும் மாற்ற வேண்டியது அவசியம்.
வன்முறையான அடக்குமுறை ஆபத்தானது
அதற்கு மாறாக அவர்களின் மீது படைபலத்தைப் பிரயோகித்து வன்முறை தழுவிய ரீதியில் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் ஒடுக்குவது தவறானதும் ஆபத்தானதுமான பாதைகளைத் திறப்பதற்கே வழிவகுக்கும்.
சமத்துவமான அரசியல்
முறைமையினை அடித்தளமாகக் கொண்டு சகல தரப்பினருக்குமான பொருளாதாரத்தையும்
பன்மைத்துவம் மிக்க சமூக பண்பாட்டு அம்சங்களையும் வளர்த்தெடுக்க
வேண்டியது மிக அவசியமானதாகும். இதனை எந்தச் சந்தர்ப்பத்திலும் வன்முறை
தழுவிய ரீதியில் கையாள்வதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” என தெரிவித்துள்ளார்.