மயிலத்தமடு அடாவடி குறித்து நாடாளுமன்றில் குரல் எழுப்பிய கஜேந்திரன்
மட்டக்களப்பு- மயிலத்தமடு சம்பவத்துக்கு எதிராகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் சபையில் கருத்து தெரிவித்துள்ளார்.
மயிலத்தமடு பிரதேசத்தை நேற்று (22.08.2023) பார்வையிடச் சென்ற பல்சமய மதத் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைப் பௌத்த தேரர் கொண்ட குழுவினர் தடுத்துவைத்திருந்தபோதே அவர் தனது எதிர்ப்பைச் சபையில் வெளிப்படுத்தி அவர்களை விடுவிக்கக் கோரி குரல் கொடுத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், வீழ்ந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன என்று கூறிக்கொண்டிருக்கும் நேரத்தில் 1948ஆம் ஆண்டில் இருந்து தமிழர்களை அழித்தது போதாதென்று இப்போது மீண்டும் தமிழர்களை அழிப்பதற்கான முயற்சி தீவிரமடைந்துள்ளது.
சிங்கள பெரும்பான்மை குழு
மட்டக்களப்பு - மயிலத்தமடு பகுதியில் தொடர்ச்சியாக அச்சுறுத்தலை எதிர்நோக்கி வரும் பண்ணையாளர்களைச் சந்திப்பதற்காக சர்வமதகே குழு சென்றுள்ளது. இஸ்லாமிய மெளலவி, இரண்டு கிறிஸ்தவ மதகுருக்கள், இந்து மத குரு ஒருவரும் ஊடகவியலாளர்களும் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அங்கு சென்றிருந்தனர்.
அவர்கள் பண்ணையாளர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த பின்னர் திரும்பி வந்துகொண்டிருந்த போது, பௌத்த மதகுரு தலைமையிலான சிங்கள பெரும்பான்மை குழுவொன்று அவர்களை வழிமறித்துப் பல மணித்தியாலங்களாக அவர்களைத் தடுத்து வைத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் எமது கட்சித் தலைவர் கஜேந்திரகுமாரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து அவர் ஜனாதிபதி செயலாளரைத் தொடர்புகொண்டு கூறியதுடன், ஜனாதிபதி செயலாளர் பொதுமக்கள் பாதுகாப்பு செயலாளரிடம் இது பற்றிக் கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இனவெறிச் செயற்பாடுகள்
ஆனால் மூன்றரை மணித்தியாலங்கள் கடந்தும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் சென்ற வாகனங்களின் திறப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அங்கு சுற்றிவளைக்கப்பட்டுள்ள 150இற்கும் மேற்பட்ட சிங்களக் குழுவினருக்குச் சாராயம் வழங்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் சிக்கியுள்ளவர்களின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. தயவு செய்து இங்கு சபைக்குத் தலைமை தாங்கும் உறுப்பினர் இந்த விடயம் தொடர்பில் உடனடியாகச் சபாநாயகருக்கு அறிவித்து அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறான இனவெறிச் செயற்பாடுகள் தொடர்ந்தால் மீண்டும் இந்த நாட்டில் தமிழர்கள் கடந்த காலங்களைப் போன்று கொன்று குவிக்கக் கூடிய ஆபத்து காணப்படுகின்றது. இதனால்தான் சுயாட்சி உரிமையைக் கோருகின்றோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




