மே தினத்தன்று போராட்ட களத்திற்குள் வர வேண்டாம்:அரசியல்வாதிகளுக்கு அறிவித்த இளையோர்
காலிமுகத் திடல் போராட்ட களத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் செய்தி ஒன்றை வழங்கியுள்ளனர்.
எதிர்வரும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினத்தன்று அரசியல்வாதிகளை அழைத்துக்கொண்டு போராட்ட களத்திற்கு வர வேண்டாம் என இளைஞர்,யுவதிகள் அரசியல் கட்சிகளுக்கு அறிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, மே தினத்தன்று தமது கட்சியினரை காலிமுகத் திடல் போராட்ட களத்திற்கு செல்லுமாறு அறிவித்திருந்தார். இதனையடுத்தே போராட்ட களத்தில் உள்ள இளைஞர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு காலிமுகத் திடலில் இளைஞர், யுவதிகள் கடந்த 20 நாட்களாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த அரசியல் கட்சிகளின் ஆதரவும் இன்றி இளைஞர்கள் தன்னெழுச்சியாக இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.