யாழில் இடம்பெற்ற மே தின நிகழ்வுகள்
புதிய மார்க்சிச லெனினிஷக் கட்சியின் மே தின ஊர்வலம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
ஆரியகுளம் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் றிம்மர் மண்டபம் வரை பேரணியாக சென்று ரிம்மர் மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
உழைக்கும் மக்கள் ஒன்றிணைவோம் நாட்டின் வளங்களை பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளுடன் புரட்சிகர மேதினம் முன்னெடுக்கப்பட்டது புதிய மாக்சிய லெனினிஷக் கட்சியின் வட பிராந்திய செயலாளர் செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அரசியல் குழு உறுப்பினர்களான க.தணிகாசலம், சட்டத்தரணி சோ.தவராஜா, எம்.இராசநாயகம், ச.நித்திகா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது புரட்சிகர பாடல்கள் இசைநிகழ்வுகள் உரையாடல்கள் என்பன இடமாபெற்றன.
தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம்
தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலை அரங்கில் இந்த மே தின கூட்டம் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
பருத்தித்துறையில் நடைபெற்ற ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின நிகழ்வுகள்
தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்றையதினம் (01) தமது மே தின நிகழ்வுகளை பருத்தித்துறையில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.
அதனடிப்படையில் ஈ.பி.டி.பியின் இவ்வாண்டுக்கான தொழிலாளர் தினம் பருத்தித்துறை நகரில் பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தலைமை தாங்கியிருந்தார்.
முன்பதாக மேதின நிகழ்வுகளில் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலக முன்றலிலிருந்து அழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களின் பிரசன்னத்துடன் வாகனப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதி வழியாக பருத்தித்துறை நகரை சென்றடைந்தது.
மற்றொரு வாகன பேரணி கட்சியின் சாவகச்சேரியிலுள்ள பிரதேச அலுவலக முன்றலிலிருந்து பேரெழுச்சியுடன் ஆரம்பித்து பருத்தித்துறையை நோக்கி வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்பின்னர் பலநோக்கு கூட்டறவு சங்க கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது உழைப்பாளர் தின செய்தி வாசிக்கப்பட்டதுடன் உறுதியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.. மேலும் தொழிற் சங்ககங்களின் பிரதிநிதிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - கஜி
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் மே தின நிகழ்வு யாழ்ப்பாணம் கொக்குவிலில் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வு தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் நா.பார்த்தீபன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், மற்றும் சமூக செயற்பாடாளர் க.அருந்தவபாலன் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சூழல் பாதுகாப்பே உழைப்புக்கான உத்தரவாதம் அதுவே எம் இருப்புக்கான
உத்தரவாதம் ஆகும் எனும் எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு குறித்த
மேதினம் முன்னெடுக்கப்பட்டது.