மாவீரர் நினைவேந்தல் காணொளி பகிர்வு விவகாரம்: கேள்வி எழுப்பிய நீதவான்
மாவீரர் நினைவேந்தல் தொடர்பான காணொளிகளை தயாரித்து, அதனை பதிவேற்றியவர்களை முதலில் விசாரிக்காமல், குறித்த காணொளிகளை தமது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு கோருவதை எப்படி நியாயப்படுத்த முடியும் என கொழும்பு மேலதிக நீதவான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அணுகுமுறை தூதரை சுடுவதற்கு ஒப்பானது என்றும் நீதிவான் சுட்டிக்காட்டியுள்ளார். மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேராவுக்கு பிணை வழங்கும் போதே கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க, இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
எனவே, நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்களை விசாரணை செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
வழக்கு ஒத்தி வைப்பு
எனினும், அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கொண்டாட்டங்களின் காணொளிகளை பேஸ்புக் ஊடாக பகிர்ந்தமை தொடர்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கையின் வட மாகாணத்தில் அவ்வாறான கொண்டாட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்தனர்.
இதன்போது, தமது வாதத்தை முன்வைத்த பிரதிவாதியின் சட்டத்தரணி, வடமாகாணத்தில் மாவீரர்நாள் நினைவேந்தல்கள் இடம்பெற்றதாக பொது பாதுகாப்பு அமைச்சரே நாடாளுமன்றில் ஒப்புக்கொண்டதை சுட்டிக்காட்டினார்.
இதன்படி 244 நினைவேந்தல்கள் இடம்பெற்றதாகவும், 10 சந்தர்ப்பங்கள் விடுதலைப் புலிகளின் கொடி காட்டப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்ததாகவும், பிரதிவாதியின் சட்டத்தரணி தெரிவித்தார்.
இந்தநிலையில் இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த மேலதிக நீதவான், சந்தேகநபர் பகிர்ந்த காணொளியை உருவாக்கி முதலில் வெளியிட்டவர்களை குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணை செய்தனரா என வினவினார்.
இருப்பினும், அவ்வாறான விசாரணையும் நடத்தப்படவில்லை என்று விசாரணை அதிகாரிகள், பதிலளித்தனர். இதனையடுத்து விசாரணையை எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |