தாயகத்தில் பூத்துக்குலுங்கும் கார்த்திகை மலர்: நினைவேந்தலுக்கு தயாராகும் தாயகம்(Photos)
மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தில் தமிழீழ தேசிய மலரான கார்த்திகை பூ செழித்து
வளர்ந்து பூத்திருப்பதோடு தமிழர் தாயகமும் மாவீரர் நினைவேந்தலுக்கு பேரெழுச்சியுடன் தயாராகி வருகிறது.
ஈழ எழுச்சி மலரான இது தமிழீழ தேசிய மலராக கார்த்திகை பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதத்தில் செழித்து வளர ஆரம்பிக்கும் இந்த தாவரம் கார்த்திகை, மார்கழி,தை மாதங்களில் துளிர்ப்போடும் செழிப்போடும் வளர்ந்து பூக்களை பூத்து சூழலை அழகாக்கும்.
ஈழ எழுச்சி மலர்
மாவீரர் மாதமான கார்த்திகையில் வளர்வதனால் மாவீரரை அஞ்சலிப்பதாக, அஞ்சலிப்பதற்காக இந்த மலர் மலர்வதாக தாம் நினைத்துக் கொள்கின்றோம், என தாயகப்பரப்பில் வாழும் மக்கள் கார்த்திகை மலர் பற்றிய தங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
தமிழீழ தேசத்தின் எழுச்சி நிறங்களான சிவப்பு மஞ்சள் நிறங்களை தன் இதழில் கொண்டிருப்பதால் ஈழ எழுச்சியை இந்த மலர் தங்கள் எண்ணங்களில் தோற்றுவித்து விடுகின்றது என மக்கள் கூறுகின்றனர்.
தமிழீழத்தின் தேசிய கொடியில் உள்ள சிவப்பு , மஞ்சள் நிறங்களை இந்த பூ கொண்டுள்ளது. இந்த நிறங்கள் தான் தமிழீழத்தின் தேசிய எழுச்சி நிறங்களாக அமைந்து விடுகின்றன.
தேசிய மலராக இந்த பூ இருப்பது பெருமைக்குரியதாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, ஆனையிறவு, முகமாலை, யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் கார்த்திகை செடி செழித்து வளர்ந்திருப்பதை அவதானிக்க முடியும்.
கார்த்திகை பூ
தாவரம் என வகைப்படுத்தப்படும் கார்த்திகைச் செடியின் விஞ்ஞானப் பெயர் Gloriosa superba L.ஆகும்.
இது பூக்கும் தாவரம். கூர்ப்பில் உயர்நிலையில் இருக்கும் இது ஒரு ஒரு வித்திலைத்தாவரமாகவும் இருக்கின்றது.
நிலக்கீழ் தாவரமாக அமைவதால் தகாத காலம் கழித்தலைச் செய்வதோடு நீண்ட கால நிலைத்தலை காட்டுகின்றது.
நிலம் நீரால் நனைந்து நிலக்கீழ் கிழங்கை தூண்டும் போது துளிர்த்து செடியாகி செழித்து வளர்கின்றது.
தமிழர் மனங்களில் கார்த்திகை மலர் ஒரு இலட்சியத் தீயை மூட்டிவிடுகின்றது. இலட்சிய வேட்கையை ஏற்படுத்தி விடுகின்றது.
ஈழத்தமிழரின் அடையாளங்களில் இதுவும் ஒன்றாகி விடுகின்றதை அவதானிக்கலாம் என பாடசாலை ஆசிரியர் ஒருவர் விளக்கியுள்ளார்.
அந்த வகையில், இன்றையதினம் தாயகம் எங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள், விசேட இடங்களில் மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழினத்தின் உரிமைக்காகப் போராடி இன்னுயிர்களை இழந்த நாயகர்களின் - மாவீரர் தினமான இன்று (27.11.2023) நினைவுகூருவதற்குத் தாயகத்தில் மக்கள் பேரெழுச்சியுடன் தயாராகி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |