மாவீரர் நினைவேந்தலுக்கு பேரெழுச்சியுடன் தயாராகும் தாயகம்(Video)
மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அஞ்சலி நிகழ்வுகளுக்குத் தயார்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் யாழ்ப்பாணம் - வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லமும் மாவீரர் நினைவேந்தலுக்கு தயாராகியுள்ளது.
எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவம் ஆக்கிரமித்திருக்கின்ற போதிலும் அருகிலுள்ள காணி ஒன்றில் சுடர் ஏற்றி நினைவேந்தல் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதானம் செய்யப்பட்டு அஞ்சலி நிகழ்வுகளுக்குத் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
துயிலும் இல்லங்களில் மாவீரர் தினத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நேற்று இரவே பூர்த்தியாகியுள்ளன.
துயிலும் இல்லங்களைச் சூழச் சிவப்பு, மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு நடுவில் கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது.
இன்று மாலை அங்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வுகளில் சரியாக மாலை 6.02 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடரேற்றல் இடம்பெறும்.
இதன்போது மாவீரர் நாள் பாடல்களும் ஒலிக்கவிடப்படும் என்று மாவீரர் தின ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, புலம்பெயர் தேசங்களிலும் இன்று மாவீரர் தின நிகழ்வுகளைப்
பேரெழுச்சியுடன் அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
தமிழினத்தின் உரிமைக்காகப் போராடி இன்னுயிர்களை இழந்த நாயகர்களின் - மாவீரர் தினமான இன்று (27.11.2023) நினைவுகூருவதற்குத் தாயகத்தில் மக்கள் பேரெழுச்சியுடன் தயாராகி வருகின்றனர்.
மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள், விசேட இடங்களில் மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவீரர் நினைவேந்தல்
மாவீரர் துயிலும் இல்லங்கள் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்படுவதுடன் இன்று (27)மாலை 6.05 மணிக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் அரச புலனாய்வாளர்களின் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் தின நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் இன்று உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளன.
மாவீரர் தினத்தை பேரெழுச்சியுடன் அனுஷ்டிப்பதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் கடந்த ஒரு வாரமாக மக்களின் பங்களிப்புடன் சிரமதானம் செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்