கூட்டத்தைப் புறக்கணித்ததா தமிழரசுக் கட்சி? மாவை சேனாதிராஜா விளக்கம்
தமிழ் கட்சிகளின் ஒன்று கூடலை தமிழரசு கட்சி புறக்கணிக்கவில்லை என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் திண்ணையில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று தற்போது நடைபெற்று வருகிறது.
இக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளாத நிலையில், இது குறித்து எமது செய்திப் பிரிவு தமிழரசுக் கட்சியின் தலைவரிடம் வினவியிருந்தது. இதற்குப் பதில் வழங்கிய மாவை சேனாதிராஜா,
இன்றைய கூட்டத்தினை தமிழரசுக் கட்சி ஒத்தி வைக்குமாறு கோரியிருந்தது. எனினும், எமது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக இன்றைய கூட்டத்தில் எம்மால் கலந்துகொள்ள முடியவில்லை.
எனினும், நாங்கள் தமிழ் மக்களின் அரசியல் நலன்சார்ந்து எப்போதும் இணைந்து பயணிக்கத் தயாராகவே இருக்கிறோம். இன்றைய கூட்டத்தினை புறக்கணிக்கும் நோக்கம் தமிழரசுக் கட்சிக் கிடையாது.
இக்கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை அடுத்து, தமிழரசுக் கட்சி தனது பதிலை விரைவில் முன்வைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்புக்கான வரைபை முன்வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து அனைத்து கட்சிகளுடனும் இணைந்து நாங்கள் பயணிக்கத் தயாராக இருக்கிறோம். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் இந்திய துணைத்தூதுவருடனான சந்திப்பில் இது தொடர்பில் பேசியிருக்கிறார் என்றார்.
இன்றைய கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem), தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (D. Siddarthan), தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran), தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளர் வி.பி.சிவநாதன் உள்ளிடோர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.