மாவையின் வீட்டில் பொலிஸார் விசாரணை!
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) வீட்டில் யாழ் கே.கே. எஸ் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த பதாகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர் சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
காட்சிப்படுத்தப்பட்ட பதாகை
மேலும், அந்த பதாகையில், மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசு துரோகிகள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேற்குறித்த பதாகை தொடர்பில் பொலிஸார் மாவையின் வீட்டாரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, அந்த பதாகையை காட்சிப்படுத்தியது யார், மற்றும் அதன் பின்னணி என்ன என்பவை தொடர்பில் மாவையின் குடும்பத்தாரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டிற்கமையவே, இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இது குறித்து உறுதிபடுத்துவதற்கு, கே.கே. எஸ் பொலிஸாரை தொடர்பு கொண்ட போதிலும், அவர்கள் தமக்கு இந்த விடயம் தொடர்பில் தெரியாது என தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த பதாகை விவகாரம் குறித்து இன்று காலை தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
அதேவேளை, மேற்குறிப்பிட்ட தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர், செய்த முறைப்பாட்டின் போது, குறிப்பாக இந்த பதாகை காட்சிபடுத்தப்பட்டிருந்ததனால், தமக்கு உயிரச்சுறுத்தல், இருந்தமையாலேயே இறுதி வணக்கத்தில் கலந்து கொள்ளவில்லை என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்தி ...
You My Like This Video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |