மெத்யூ டொய்ல் விவகாரம்: பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஸ்டார்மருக்கு கடும் நெருக்கடி
தனது முன்னாள் சிரேஷ்ட உதவியாளர் மெத்யூ டொய்லுக்கு இராஜதந்திரப் பதவி வழங்குவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டதை பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் உறுதிப்படுத்தியுள்ளார்.
டவுனிங் வீதியின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான டொய்ல், கடந்த மார்ச் மாதம் பிரபுக்கள் சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இருப்பினும், சிறார் துஷ்பிரயோக குற்றவாளி ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, கடந்த பெப்ரவரி மாதம் அவர் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்.
நெருக்கடி
இந்தப் பின்னணியில் அவருக்கு வெளிவிவகாரத் துறையில் பதவி வழங்க முயன்றது "தவறான முன்மாதிரி" என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
பிரதமர் கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் கெமி பேடனாக் (Kemi Badenoch), ஸ்டார்மர் தலைமையிலான அரசு "நட்புமுறை நியமனங்களில்" ஈடுபட்டுள்ளதாகச் சாடினார்.

குறிப்பாக, சர்ச்சைக்குரிய முறையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சிவில் அதிகாரி சர் ஒலி ராபின்ஸ் அளித்த சாட்சியங்களைச் சுட்டிக்காட்டிய அவர், பிரதமரின் இந்தச் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையற்றவை எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த ஸ்டார்மர், ஒரு பொறுப்பிலிருந்து விலகும்போது மற்றுமொரு பணிக்காக ஆலோசனைகள் நடப்பது இயல்பானது என்றும், டொய்ல் விவகாரத்தில் அது நடைமுறைக்கு வரவில்லை என்றும் கூறித் தற்காத்துக் கொண்டார்.
பதவி நீக்கம்
ஜெப்ரி எப்ஸ்டீன் உடனான தொடர்புகளுக்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமெரிக்க தூதுவர் லார்ட் மண்டெல்சனின் நியமனமும் இந்த விவாதத்தில் பேசுபொருளானது.

முறையான பாதுகாப்பு ஆய்வுகள் இன்றி மண்டெல்சன் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும் முறைப்பாடுகளை ஸ்டார்மர் மறுத்துள்ளார்.
இருப்பினும், நாடாளுமன்றத்தில் ஸ்டார்மர் உரையாற்றியபோது ஆளும் லேபர் கட்சி எம்.பிக்கள் பலர் மௌனமாக இருந்தது, அக்கட்சிக்குள்ளேயே இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதை வெளிப்படுத்தியது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமரின் முன்னாள் தலைமை அதிகாரி மோர்கன் மெக்ஸ்வீனி இது குறித்து சாட்சியமளிக்கவுள்ளதால், இந்த விவகாரம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.