கிரிக்கெட் கனடா மீது ஊழல் முறைப்பாடு: சர்வதேச கிரிக்கெட் பேரவை தீவிர விசாரணை
சமீபத்தில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத் தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நிர்ணயச் சதி (Match Fixing) செய்ததாகக் கூறப்படும் முறைப்பாடுகள் குறித்து கிரிக்கெட் கனடா அமைப்பு மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கனடாவின் பொது ஒளிபரப்பு நிறுவனமான சிபிசி (CBC) வெளியிட்ட "ஊழல், குற்றம் மற்றும் கிரிக்கெட்" (Corruption, Crime and Cricket) என்ற புலனாய்வு ஆவணப்படத்தில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
குறிப்பாக, சென்னையில் நடைபெற்ற போட்டியில் கனடா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த விதம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவு (ACU) தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
இந்த விசாரணையில் கனடா அணியின் தலைவர் தில்ப்ரீத் பஜ்வா வீசிய ஆட்டத்தின் ஐந்தாவது ஓவர் முக்கியமாக உற்றுநோக்கப்படுகிறது.

நியூசிலாந்து அணி இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்த போது, அந்த ஓவரை ஒரு நோ-பால் (No-ball) மற்றும் வைட் (Wide) பந்துடன் தொடங்கிய பஜ்வா, மொத்தம் 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.
இதுதவிர, அணியின் முன்னாள் பயிற்சியாளர் குர்ரம் சோஹன் (Khurram Chohan) கசிந்த தொலைபேசி உரையாடல் ஒன்றில், குறிப்பிட்ட சில வீரர்களைத் தெரிவு செய்யுமாறு நிர்வாக உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்ததாகக் கூறியுள்ள விடயமும் விசாரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கிரிக்கெட் கனடா, இந்த முறைப்பாடுகளை மிகவும் தீவிரமாகக் கருதுவதாகவும், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.