அடுத்த ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகள் சீன அரசாங்கத்தினால் நன்கொடை
அரச பாடசாலைகள், அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் பிக்குகளுக்கான 2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகள் சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ளன.
இதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ்கள் பரிமாற்றம் கல்வி அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஷென்ஹொங், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவிடம் சான்றிதழைக் கையளித்திருந்தார்.
நன்கொடை
இந்த விசேட உதவித் திட்டத்தின் கீழ், 2027ஆம் ஆண்டிற்காக இலங்கையில் உள்ள சுமார் 4.18 மில்லியன் பாடசாலை மாணவர்களின் முழுமையான சீருடைத் தேவை பூர்த்தி செய்யப்படவுள்ளது.

இதற்காக 10.820 மில்லியன் மீட்டர் அளவிலான பாரிய சீருடை துணியை சீன அரசாங்கம் இலங்கைக்கு முற்றிலும் இலவசமாக நன்கொடையாக வழங்கவுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட வேண்டுகோளின் பேரில் 88,60,990 மீட்டர் பாடசாலை சீருடை துணி சீன அரசாங்கத்தினால் முதற்தடவையாக இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.