நுவரெலியாவில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்
நுவரெலியாவின் பழமையான தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு கைமாற்றுவதற்கு அராசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக நாளை தினம் (09.11.2023) நண்பகல் 12 மணிக்கு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா தபால் அலுவலகத்தில் இன்றைய தினம் (08.11.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் நிலைய வளாகத்தில் புதிய ஹோட்டல்
இதன்போது, நுவரெலியா தபால் நிலைய வளாகத்தில் புதிய ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த 6 முதல் 7 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், தற்போது இந்த வேலைத்திட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதற்கு எதிராக நுவரெலியா நகரில் உள்ள ஏழுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கு அனைவரும் இணைந்து ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்
நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்து விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலும் கடமைகளுக்கு சமூகளிக்காது நுவரெலியா தபால் பணியாளர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நுவரெலியா நகரத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் நாளை நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




