பாரத்-லங்கா வீடமைப்பு திட்டத்தில் பெரும் முறைகேடு
இந்திய அரசின் நிதியில் கட்டப்படும் பாரத்-லங்கா மலைநாட்டு தோட்ட வீடமைப்பு திட்டத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக ஆங்கில பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த திட்டம் சுமார் 375 மில்லியன் ரூபா செலவில் 1,300 வீடுகளை கட்டுவதற்கான பாரிய திட்டமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த வீடமைப்பு திட்டத்திற்காக ஒப்பந்தகாரர்களை தெரிவு செய்யும் முறையில் இந்த முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கட்டுமான தொகை
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேலும், கடந்த நல்லாட்சியின் போது, நடைபெற்ற முதற்கட்ட மலைநாட்டு தோட்ட வீடமைப்பு திட்டத்தில், இந்த பணியை கண்காணித்த சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ICRC), இலங்கை செஞ்சிலுவை சங்கம் (SLRC), ஐக்கிய நாடுகள்-ஹபிடாட் (UN-HABITAT) ஆகிய நடுநிலையாளர்கள் இந்த முறை நடைபெறும் பாரத்-லங்கா மலைநாட்டு தோட்ட வீடமைப்பு திட்டத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது.
ஒரு வீட்டின் கட்டுமான தொகை 28 இலட்சம் ரூபாய் என மதிப்பிட்டு 1,300 வீடுகளை சுமார் 375 மில்லியன் ரூபா செலவில் கட்டும் இரண்டாம் கட்ட, மலைநாட்டு தோட்ட இந்திய வீடமைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டம், கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பித்து வைக்கபட்டது.
இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய தூதர் சந்தோஷ் ஜா, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்கு சமாந்தரமாக மலையகமெங்கும் பல்வேறு இடங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரமுகர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த வீடுகளை கட்டும், ஒப்பந்தக்காரர்களின் தெரிவு இரகசியமாக, ஏல நடைமுறைமைகளை முழுமையாக மீறிய நிலையில் நடந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
இந்த திட்டம் தொடர்பில் ஏல கேள்வி பத்திரங்களை கோரி ஊடகங்களில் விளம்பரங்கள் செய்யப்படவில்லை. அதேபோல் அரசாங்க வர்த்தமானியிலும் கேள்விகள் கோரப்படவில்லை.
இது முழுமையான முறை தவறிய சட்ட விரோத நடைமுறையாகும் என கூறப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியால், கடந்த நல்லாட்சியின் போது, ஒரு வீட்டின் கட்டுமான தொகை 13 இலட்சம் ரூபாய் என மதிப்பிட்டு, மலைநாட்டு தோட்ட இந்திய வீடமைப்பு நடைமுறை படுத்தப்பட்டு, 4,000 வீடுகள் கட்டப்பட்டன.
நரேந்திர மோடியால் உறுதி
இந்த கட்டுமான பணியின் போது தொகை மதிப்பீடு, “கன்ட்ராக்டர்ஸ்” என்னும் ஒப்பந்தக்காரர்களை தெரிவு ஆகிய அனைத்தும் இந்திய தூதரக பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ICRC), இலங்கை செஞ்சிலுவை சங்கம் (SLRC), ஐக்கிய நாடுகள்-ஹபிடாட் (UN-HABITAT) ஆகிய நிறுவனங்கள் மூலமாகவே முன்னெடுக்கப்பட்டன.
இம்முறை இந்த அனைத்து நடைமுறைகளும் தூக்கி வீசப்பட்டுள்ளன. 2017ம் வருடம் நல்லாட்சியின் போது, இலங்கை வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் உறுதி அளிக்கபட்ட இந்த 10,000 வீட்டு திட்டம், சுமார் ஆறு வருடங்கள் கழித்து, இந்த தேர்தல் ஆண்டில் ஆரம்பிக்கபடுகின்றது.
மேலும், இந்தியாவின் இன்றைய ஆளும் கட்சியின் பெயரில் இடம் பெற்றுள்ள “பாரதம்” என்ற சொல் இம்முறை இங்கே பயன்படுத்தபட்டு, இந்த திட்டம், “பாரத்-லங்கா மலைநாட்டு தோட்ட வீடமைப்பு திட்டம்” என அழைக்கபடுகிறது.
இதற்கான நிதி, இந்திய அரசால் வழங்கப்படுகிறது. அது கடன் அல்ல. இந்திய வம்சாவளி மலைநாட்டு தோட்ட தொழிலாளர்களின் லயன் வாழ்கையை மற்றும் உயரிய நோக்கில் வழங்கப்படும், நன்கொடை ஆகும்.
இந்நிலையில், நன்கொடையாக வழங்கப்படும் இந்த தொகையின் பயன்பாடு தொடர்பில், குறிப்பாக வீடு கட்டும் “கன்ட்ராக்டர்ஸ்” என்னும் ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்வது தொடர்பில், தமக்கு எந்தவொரு பொறுப்பும் இல்லை என்ற முறையில் இந்திய தூதரகம், இதுபற்றி கேள்வி எழுப்பியபோது தெரிவித்தமையானது மலையக சமூக அவதானிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ICRC), இலங்கை செஞ்சிலுவை சங்கம் (SLRC), ஐக்கிய நாடுகள்-ஹபிடாட் (UN-HABITAT) ஆகிய நடுநிலையாளர்கள் இந்த முறை நடைபெறும் பாரத்-லங்கா மலைநாட்டு தோட்ட வீடமைப்பு திட்டத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்கள் என்ற தகவலும், இந்திய தூதரகத்துக்கு தெரியாத என்ற கேள்வியும் மலையக சமூக அவதானிகள் மத்தியில் எழுந்துள்ளதாக அங்குள்ள செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |