மக்களைப் பாதுகாக்கும் ஐ. நா-வின் கோட்பாடு: மீண்டும் உயிர்ப்பிக்க மார்ட்டின் கிரிஃபித்ஸ் அழைப்பு
உலகெங்கிலும் அரங்கேறி வரும் கொடூரங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு மத்தியில், மக்களைப் பாதுகாப்பதற்கான ஐ.நாவின் 'பாதுகாக்கும் பொறுப்பு' என்ற சர்வதேச சட்டக் கோட்பாட்டை மீண்டும் வலுவாக உயிர்ப்பிக்க வேண்டும் என ஐ. நாவின் மனிதநேய விவகாரங்களுக்கான முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நியூயோர்க்கில் உள்ள ஐ. நா பொதுச் சபையில் அண்மையில் விவாதங்கள் நடைபெற்ற நிலையில், இந்த முக்கியக் கோட்பாடு எவ்வாறு அரசியல் காரணங்களால் முடக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
ருவண்டா மற்றும் போஸ்னியா இனப்படுகொலை
ருவண்டா மற்றும் போஸ்னியா இனப்படுகொலைகளைத் தடுக்கத் தவறியதன் விளைவாக, எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க 2005ஆம் ஆண்டு ஐநா உலக உச்சிமாநாட்டில் இந்த 'R2P' கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு நாடு தன் நாட்டு மக்களைப் பாதுகாக்கத் தவறும்போது, சர்வதேச சமூகம் தலையிட்டு அந்த மக்களைக் காக்க வேண்டும்.

ஆனால், 2011ஆம் ஆண்டு லிபியாவில் நடந்த உள்நாட்டுப் போரின்போது, மனிதநேய அடிப்படையிலான தலையீடு என்ற பெயரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இக்கோட்பாட்டைப் பயன்படுத்தியுள்ளன.
இதனால் அதிருப்தியடைந்த ரஷ்யா உள்ளிட்ட நாடுகள், இதனை மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கக் கருவியாகப் பார்க்கத் தொடங்கின.
இதன் விளைவாக, சிரியா, பாலஸ்தீனம், சூடான், மியான்மர் போன்ற நாடுகளில் நடந்த கொடூரமான மனித உரிமை மீறல்களின்போது சர்வதேச சமூகம் மௌனம் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இனப்படுகொலை
தற்போது சூடானின் எல்-ஒபெய்ட் நகரம் முற்றுகையிடப்பட்டு, மீண்டும் ஒரு இனப்படுகொலை அரங்கேறும் அபாயம் உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள கிரிஃபித்ஸ், இக்கோட்பாட்டைச் செயல்படுத்த சில முக்கியப் பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.
முதலாவதாக, இந்த சட்டக் கட்டமைப்பை உருவாக்கிய சர்வதேசக் குழுவை மீண்டும் கூட்டி, அதன் செயல்பாட்டு எல்லைகளைத் துல்லியமாக மாற்றி அமைக்க வேண்டும்.

இரண்டாவதாக, பொதுச் சபை, பாதுகாப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் பேரவை ஆகிய ஐ.நா அமைப்புகள் இதற்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.
இறுதியாக, இந்த கோட்பாட்டை எப்போது, எங்கு பயன்படுத்த வேண்டும் என்றும் ஐ. நாவிற்கு அறிக்கை சமர்ப்பிக்க ஒரு தனி அதிகாரப்பூர்வ கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனப்படுகொலைகளைத் தடுப்பது என்பது ஒரு அரசியல் செயல் அல்ல, அது ஒட்டுமொத்த மனிதநேயத்திற்கான கடமை என்றும், உலகத் தலைவர்கள் வெறும் கவலை தெரிவிப்பதோடு நிறுத்தாமல் துரிதமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்றும் அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam