மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்! 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி (PHOTOS)
மன்னாரில் இருந்து கடல் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 7 மீனவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் - பேசாலையிலிருந்து நேற்று மாலை 3 மணியளவில் கடலுக்குப் புறப்படத் தயாரான படகுகளைக் கடற்படையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோது கடற்படையினருக்கும் மீனவர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது கடற்படையினர் மீனவர் ஒருவர் மீது கடும் தாக்குதல் மேற்கொண்டதால் பாதிப்படைந்த மீனவர் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதலுக்கான காரணம்
இதன்பின்பு மீனவர்கள் கடற்படையினரிடம் மன்னிப்புக் கோரி சமரசத்தின அடிப்படையில் தொழிலுக்குச் சென்றனர். இவ்வாறு தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மாலை 5.30 மணியளவில் தலைமன்னார் கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் அவ்விடத்துக்குப் படகில் வந்த கடற்படையினர் மீனவர்களை மீண்டும் சோதனைக்கு உட்படுத்தியதோடு படகுகளுடன் தீடைக்குக் கொண்டு செல்ல முற்பட்டனர்.
வேண்டுமானால் எம்மைக் கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லுங்கள். எதற்கு யாருமே அற்ற தீடைக்குக் கொண்டு செல்கின்றீர்கள்? என மீனவர்கள் கேள்வி எழுப்பியபோதும் அதற்குச் செவிசாய்க்க மறுத்த கடற்படையினர் மீனவர்களைத் தீடைக்குக் கொண்டு சென்றனர்.
மீனவர்கள் மீது தாக்குதல்
தீடையில் இறக்கிய மீனவர்களை மீண்டும் சோதனை செய்ததோடு உடல் பரிசோதனைகளையும் முன்னெடுத்த சமயம் பேசாலையில் முரண்பாடு ஏற்பட்டபோது பிடிக்கப்பட்ட காணொளி படத்தின் மூலம் மீனவர்களை இனங்கண்டு ஆறு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனப் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.
தீடையில் தாக்கப்பட்ட 6 மீனவர்களும் ஏனைய மீனவர்களின் உதவியுடன் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக மீனவர் சங்கங்கள், பங்குத் தந்தை ஆகியோர் கடற்படையின் உயர் அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும் தீர்வு கிட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.




