கைப்பேசி உள்ளிட்ட 623 பொருட்களின் இறக்குமதி குறித்த தீர்மானம்! விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு ஏற்படுமா?
தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் குறித்த பொருட்களுக்கு விலை அதிகரிப்பு அல்லது தட்டுப்பாடு ஏற்படுமா என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன விளக்கியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச ரீதியிலான அவசர நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே அவசரமற்ற பொருட்களுக்கான இறக்குமதி விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
என்ற போதும் இதனூடாக குறித்த பொருட்களுக்கு விலை அதிகரிப்பு அல்லது தட்டுப்பாடு ஏற்படாது. வெளிநாட்டு நாணய கட்டுப்பாட்டு முறைமைக்கு மாத்திரமே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, கைப்பேசிகள், மின்விசிறிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், புடவைகள், உதிரிப்பாகங்கள், வளிசீராக்கல் இயந்திரம், சொக்லேட், ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, மோல்ட், சீஸ் மற்றும் வெண்ணெய் போன்ற 623 பொருட்கள் அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற பொருட்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.
அதிகப்படியான இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் அந்நிய செலாவணி சந்தையின் உறுதிப்பாட்டினையும், வெளிநாட்டு நாணய சந்தையின் திரவத்தன்மையினையும் பாதுகாப்பதே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.