முல்லைத்தீவில் இடம்பெற்ற அனைத்து வயதுப் பிரிவினருக்குமான மரதனோட்டப் போட்டிகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கோடு மரதனோட்ட நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இது அனைத்து வயது பிரிவுகளையும் சேர்ந்த ஆண் பெண் இருபாலாரும் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.இந்த மரதனோட்டப் போட்டி நேற்று (16.08.2024) நடைபெற்றிருந்தது.
ஆண்களுக்கான போட்டி
ஆண்களுக்கான மரதனோட்டம் காலை 6.30 மணிக்கு முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி முன்பாக ஆரம்பமானது. முல்லைத்தீவு மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்.எஸ்.குணபாலன் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார்.
ஆண்களுக்கான மரதனோட்டம் 24 கிலோ மீற்றர் கொண்டதாக அமைந்திருந்தது.இது முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியின் முன்பாக ஆரம்பமாகி முல்லைத்தீவு நகரினை அடைந்து அளம்பில் சந்தியூடாக குமுழமுனை மகாவித்தியாலயம் முன்பாக நிறைவடைந்தது.
இந்தப் போட்டியில் 62 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.ஆண்களுக்கான போட்டியில் மு/முத்தையன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய மாணவன் ஆர்.விதுசன் முதலாமிடத்தினைப் பெற்றுள்ளார்.மு/உடையார்கட்டு பாரதி வித்தியாலய மாணவன் கு.அன்பரசன் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொள்ள மு/கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலய மாணவன் எஸ்.சுவராஜ் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
பெண்களுக்கான போட்டிகள்
பெண்களுக்கான மரதனோட்டமானது 16 கிலோ மீற்றர் கொண்டதாக திட்டமிடப்பட்டிருந்தது.இந்த போட்டி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி அளம்பில் சந்தியூடாக சென்று குமுழமுனை மகாவித்தியாலயத்திற்கு முன்பாக நிறைவடைந்தது.
பெண்களுக்கான மரதனோட்டப் போட்டியில் 50 போட்டியாளர்கள் பங்கெடுத்திருந்தனர்.
பெண்களுக்கான மரதனோட்டப் போட்டியில் முதலாம் இடத்தினை உடையார்கட்டு பிரதேசத்தினை சேர்ந்த எஸ்.கேமா என்ற வீராங்கனை பெற்றுக்கொண்டார்.
முல்லைத்தீவு மகா வித்தியாலய மாணவி எம்.அனித்தா இரண்டாம் இடத்தினையும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.விதுசா மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
பரிசில்கள்
கடந்த மூன்று வருடங்களாக முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் நடைபெற்று வரும் இந்த மரதனோட்டப் போட்டிகளை கந்தசாமி பத்மநாதன் என்ற தன்னார்வலரின் நிதி அனுசரணையுடன் அவரின் பங்கெடுத்தலுடனும் திட்டமிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
மரதனோட்டத்தில் பங்கெடுத்து இருந்தவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் முகமாக பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இருபாலாருக்கும் ஒரே விதமான முறையில் இந்த பரிசில்கள் வழங்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
முதலாமிடத்தினைப் பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கமும் பணப்பரிசிலும் வழங்கப்பட்டது.
அவ்வாறே இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு பணப்பரிசிலும் கேடயமும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு கேடயமும் பணப்பரிசிலும் வழங்கப்பட்டது. முதல் பத்திடங்களை பெற்றிருந்தவர்களுக்கு பணப்பரிசிலுடன் கேடயமும் வழங்கப்பட்டிருந்தது.
மரதனோட்டத்தில் பங்கெடுத்து அதனை முழுமையாக ஓடி முடித்திருந்த ஒவ்வொரு வீர வீராங்கனைக்கும் தலா 5000 ரூபா வீதம் ஊக்குவிப்பு பணப்பரிசிலும் வழங்கப்பட்டிருந்ததாக இந்த மரதனோட்டப்போட்டியில் தன்னுடைய மாணவர்களையும் ஈடுபடுத்தியிருந்த விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
வளர்ச்சியடையும் விளையாட்டுத்துறை
இவ்வாறான முயற்சிகள் விளையாட்டுத்துறையில் வீர வீராங்கனைகள் ஆர்வத்தோடு பங்கெடுத்துக் கொள்ள வாய்ப்பளிக்கும் நல்ல முயற்சியாகும்.
மரதனோட்டப் போட்டிகளில் வருடந்தோறும் கலந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் பாடசாலை மட்டங்களில் நடைபெறும் விளையாட்டுக்களிலும் ஆர்வத்தோடு கலந்து கொள்ள பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளவதற்காக தாம் உந்தப்படுவதாக பங்கெடுத்திருந்த போட்டியாளர்களுடன் உரையாடிய போது அவர்கள் குறிப்பிடுவதும் இங்கே நோக்கத்தக்கது.
இளவயதினரை இது போன்ற விளையாட்டு முயற்சிகளில் ஈடுபடுத்துவதனால் அவர்களிடையே நல்ல பழக்கவழக்கங்கள் பேணப்படுவதோடு சிறந்த உடலாரோக்கியமும் மேம்படுத்தப்படும் என்பதும் நோக்கத்தக்கது.
ஈழத்தமிழ் இளையவர்கள் இடையே இருக்கும் விளையாட்டாற்றல்கள் இதன் மூலம் வளர்த்தெடுக்கப்பட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - கீதன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
