பழங்குடி குழந்தைகளின் எச்சங்கள் பல கண்டுபிடிப்பு! கனடாவில் கவிழ்க்கப்பட்ட சிலைகள்
கனேடிய நகரமான வின்னிபெக்கில் விக்டோரியா மகாராணி மற்றும் இரண்டாம் எலிசபெத்தின் சிலைகள் எதிர்ப்பாளர்களினால் கவிழ்க்கப்பட்டுள்ளமைக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
கனடாவின் முன்னாள் பழங்குடிப் பள்ளிகளில் குறிக்கப்படாத கல்லறைகளில் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை எதிர்ப்பாளர்களிடையே கோபத்தை அதிகரித்தது.
கனடா நாட்டில் பிரிட்டிஷ் காலத்துப் பள்ளிகளில் மறைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பிரிட்டன் மகாராணிகளின் சிலைகளைக் கனடா மக்கள் தகர்த்து வருகின்றனர்.
17ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் பிரிட்டிஷ் மற்ற நாடுகளை அடிமைப்படுத்தத் தொடங்கியது. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா, வரை பல நாடுகளும் பிரிட்டிஷ் பேரரசுக்குக் கீழ் தான் இருந்தது.
18ஆம் நூற்றாண்டில் இருந்து 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை கனடாவைப் பிரிட்டன் தான் ஆட்சி செய்து வந்தது.
அந்தச் சமயத்தில் கனடா நாட்டில் வசித்த பூர்வக்குடி மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் கனடா பூர்வக்குடி மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டனர்.
அந்த காலகட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்துவ அமைப்புகளால் உண்டு உறைவிட பள்ளிகள் நடத்தப்பட்டது. அந்த பள்ளிகளில் பூர்வக்குடி மக்களின் குழந்தைகள் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டனர்.
பூர்வக்குடி மக்களின் தாய்மொழியைப் பேசக் கூட அந்தப் பள்ளிகளில் தடை விதிக்கப்பட்டது. பூர்வக்குடியினரின் கலாச்சார நடைமுறைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு, ஐரோப்பிய கலாசாரம் திணிக்கப்பட்டது.
இப்படி கொடூரங்கள் நடைபெற்ற போதிலும், இதுபோன்ற பள்ளிகளுக்குத் தேவையான நிதியைப் பிரிட்டன் அரசு ஒதுக்கவில்லை. இதனால் குழந்தைகள் மோசமான சுகாதார நிலையில் இருக்க வேண்டிய நிலை இருந்தது.
நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைந்ததால் விலங்குகள் வளர்ப்பு, ஆடைகள் தயாரிப்பு போன்ற வருமானம் ஈட்டும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆபத்தான சூழலில் குழந்தைகள் பணியாற்ற வேண்டி இருந்ததால், அவர்கள் உயிரிழக்கும் நிலையும்கூட ஏற்பட்டது.
அப்படி உயிரிழப்பவர்களை அந்தப் பள்ளிகளிலேயே சத்தமில்லாமல் புதைத்துவிடுவார்கள். அப்படிப் புதைக்கப்பட்ட கல்லறைகள் தான் தற்போது அங்குத் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படுகிறது.
பல்வேறு பகுதிகளிலும் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதில் பிரிட்டிஷ் கொல்ம்பிய மாகாணத்தில் உள்ள ஒரே பள்ளியில் 215 குழந்தைகளின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் சில மூன்று வயதுக் குழந்தைகளின் கல்லறைகளும் அடக்கம். இது பிரிட்டன் பேரரசு மீதான மக்கள் கோபத்தை அதிகரித்துள்ளது.
அங்குள்ள பிரிட்டன் மகாராணிகளின் சிலைகள் தகர்க்கப்பட்டு வருகிறது. அப்படி கனடா நாட்டில் அமைந்துள்ள விக்டோரிய மகாராணி மற்றும் இரண்டாம் எலிசெபத்தின் சிலைகள் தகர்க்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் இது தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டனம் வெளியிட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர், "ராணியின் சிலைகளை சிதைப்பதை நாங்கள் கண்டிக்கிறோம்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கனடா 1867ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோதிலும், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அந்நாட்டின் ராணியாகத் தொடர்வது குறிப்பிடத்தக்கது.