புதிய ஆண்டில் வன்னி தேர்தல் தொகுதியில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் - சுரேன் ராகவன் (Photos)
புதிய ஆண்டில் வன்னித் தேர்தல் தொகுதியில் பல புதிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அதற்கு வட்டாரத்தில் உள்ள தேவைப்பாடுகள் தொடர்பிலும் தெரியப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை சுதந்திரக் கட்சியின் வன்னித் தேர்தல் மாவட்ட தலைவருமான கலாநிதி சுரேன் ராகவன் (Suren Raghavan) தெரிவித்துள்ளார்.
வன்னித் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த இலங்கை சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்று வவுனியா நகரசபையின் உப தலைவர் சு.குமாரசாமி தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (23.12) மாலை இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
வன்னித் தேர்தல் தொகுதியில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் தற்போதைய நிலைகள் மற்றும் சபை வரவு செலவுத் திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளேன்.
வன்னி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும்.
குறிப்பாக அரசாங்கத்துடனும், துறை சார் அமைச்சர்களுடனும் கலந்துரையாடி வரவு செலவு திட்டம் ஊடாக புதிய ஆண்டில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் பல அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகிய உங்களது வட்டாரத்தில் உள்ள அபிவிருத்தி தேவைப்பாடுகள் குறித்து முன்வைக்கும் இடத்தில் அதனை முன்னுரிமை அடிப்படையில் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மக்களுக்கான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் புதிய தொழில் முயற்சிகளையும் வன்னியில் உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளேன்.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியை கைப்பற்றியமை பாராட்டுக்குரியது. அடுத்து வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு தாயரிப்பிலும் கவனம் செலுத்தி, அந்த சபையை திறம்பட கொண்டு நடத்த வேண்டும் என தெரிவித்தார்.



