மாந்தை கிழக்கு பிரதேசத்தின் அபிவிருத்தி குழு கூட்டம்
மன்னார் (Mannar) - மாந்தை கிழக்கு பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் கிழக்கு பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (11) இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தானின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
அத்துடன், மாந்தை கிழக்கின் பிரதேச செயலாளர் இராமதாஸ் ரமேஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
மூடப்பட்டுள்ள பாடசாலை
இந்தக் கூட்டத்தில் விவசாயம், காணி, வனவளத் திணைக்களம், கல்வி மற்றும் குடிநீர் தொடர்பான பிரச்சினைகள் முதன்மையாக கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
பாண்டியன்குளம் பாடசாலையில் உயர்தர சகல பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து தருமாறு பிரதேச அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நாளை மறுதினம் இடம்பெறும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மூடப்பட்டுள்ள மாந்தை கிழக்கின் பூவரசங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையினை மீள இயங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை செயற்படுத்த உள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் கூறியுள்ளார்.
சுத்தமற்ற குடிநீர்
இதேவேளை, மாந்தை கிழக்கிலுள்ள பாடாசலைகள் மற்றும் முன்பள்ளிகளில் மாணவர்களுக்கான சுத்தமான குடிநீர் பெற்றுக்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக தெரிவித்த மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி, பாடசாலைகளில் இருக்கும் குடிநீர் திட்டங்களானது பயன்பாடற்ற முறையில் இருப்பதாகவும், அவை எதிர்காலத்தில் மாணவர்களுக்கு பாரிய நோய்களை கொண்டு வரும் என்றும் தெரிவித்திருந்தார்.
குறித்த அதிகாரிகளுடன் இது தொடர்பில் தான் கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வுபெற்றுத் தருவதாக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி - தவசீலன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |