மலையக மக்களுக்கு காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்! மனோ வலியுறுத்தல்
மலையகப் பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாகக் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
கொட்டக்கலையில் நேற்று (08.03.2026) நடைபெற்ற 'மலையக வாழ்வுரிமை மாநாட்டில்' கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், காணி, வீடு, மற்றும் நியாயமான ஊதியம் ஆகிய மூன்றே ஒரு சமூகத்தின் வாழ்வுரிமையைத் தீர்மானிக்கும் பிரதான காரணிகளாகும். இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் ஏனைய சமூகங்களை விடப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ளனர். எனினும், நாம் எவருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல. 1948இல் பறிக்கப்பட்ட எமது குடியுரிமை, நீண்ட போராட்டங்களுக்குப் பின்னரே மீளப் பெறப்பட்டது.
காணி உரிமை
நல்லாட்சி அரசாங்கத்தின் நான்கு வருடக் காலப்பகுதியில் மாத்திரமே நாம் அதிகாரத்தில் இருந்தோம். அந்தக் குறுகிய காலத்தில் 7 பேர்ச் காணி உரிமை, தனி வீட்டுத் திட்டம், மலையக அதிகார சபை மற்றும் பாடசாலைகளுக்கான காணி ஒதுக்கீடு போன்ற பல அபிவிருத்திகளை முன்னெடுத்தோம். ஆனால், 40 வருடங்களாகப் பல்வேறு அரசாங்கங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் எதனையும் செய்யவில்லை என்றார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்த அவர், மலையக மக்களுக்கு வெறும் 'கண்காட்சிகளை' காட்ட வேண்டாம் எனவும், முறையான ஆட்சியை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அவர் மேலும் கூறுகையில், பெருந்தோட்டங்களில் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும், அங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் காணி உரிமை வழங்கப்பட வேண்டும். பயிரிடப்படாத காணிகளை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதாக 'ஹட்டன் பிரகடனத்தில்' ஜனாதிபதி அறிவித்திருந்தார். ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அரசாங்கம் உதவி
அனுராதபுரம் மற்றும் குருணாகல் பகுதிகளில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 இலட்சம் ரூபாய் வழங்கி உதவிய அரசாங்கம், மலையகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த உதவியை வழங்கவில்லை. நாம் ஒன்றும் மாற்றான் தாய் பிள்ளைகள் அல்லர் என்றார்.
டிக்கோயா - கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் சகோதரி ஒருவரின் சடலத்திற்கு நேர்ந்த அசாம்பவிதம் தொடர்பில் தான் உரிய அமைச்சருடனும் பொலிஸ் அதிகாரிகளுடனும் பேசியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்து நாளைக்குள் முறையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். இறுதியாக, மலையகத்தில் விரைவில் ஒரு பலமான 'தொழிற்சங்க சம்மேளனம்' உருவாக்கப்படும் என்றும் அவர் இதன்போது பிரகடனம் செய்தார்.