இளவரசியிடம் மலையகத் தமிழர் பற்றிய பிரித்தானியாவின் கடப்பாடுகளை நினைவூட்டுகின்றேன்: மனோ கணேசன்
இலங்கைக்கும் - பிரித்தானியாவுக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவு தொடர்பில் இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசிக்கு, இலங்கை வாழ் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் இருக்கின்ற, அவரது பிரித்தானிய முடியரசின் பாரிய கடப்பாட்டை நினைவுறுத்துகின்றேன் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
தற்போது சென்னையில் அயலக தமிழர் மாநாட்டில் தமிழக அரசின் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்டுள்ள மனோ கணேசன் சென்னையிலிருந்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மக்கள்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
"இலங்கை - பிரித்தானிய வரலாற்றில் கறுப்புப் பக்கம், பெருந்தோட்ட மக்களின் அத்தியாயம்தான். இலங்கையின் ஏனைய மக்களுடன் ஒப்பிடும்போது கல்வி, சுகாதாரம், காணியுரிமை, வீட்டுரிமை, தொழில் உரிமை ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய தரவுகளைக் கொண்ட தமிழ் பெருந்தோட்ட வதிவாளர்களின், குறை வளர்ச்சி தொடர்பிலான பிரித்தானிய முடியரசின் வரலாற்று கடப்பாட்டை இளவரசி ஆன் ஏற்க வேண்டும்.
நலிவுற்ற பிரிவினரான நமது மக்கள் தொடர்பிலான குற்றச்சாட்டு பட்டியலை இளவரசி ஆன் மீது சுமத்த நான் விரும்பவில்லை. ஆனால், இந்த கறுப்பு பக்கம் தொடர்பான நினைவூட்டலை நான் எடுத்துக்கூற விரும்புகின்றேன்.
இன்று இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என்று இன ரீதியாக அழைக்கப்படும் இம்மக்கள், பிரித்தானிய முடியரசின் பிரதிநிதிகளான கிழக்கிந்திய நிறுவனத்தினால் 1823ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்கள். இன்றும்கூட, எமது உழைக்கும் மக்கள் பெருந்தோட்ட முகாமை நிறுவனங்களுடன் பின்னி பிணைக்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் வெள்ளை ராஜ்யம் போன பிறகு உள்நாட்டு பிறவுன் ராஜ்யம் பெருந்தோட்டங்களில் எமது மக்களை இன்று ஆள்கிறது. இதனால் இதுவரையும் இந்நாட்டின் முழுமையான பிரஜைகளாக கருதப்படாமல், நமது மக்கள் வாழ்கிறார்கள்.
இந்தியாவின் பாண்டிச்சேரி மக்களுக்கு பிரான்சிய ஆட்சியாளர்கள் செய்து விட்டு சென்ற ஏற்பாடுகளை ஒத்த ஏற்பாடுகளைக்கூட பிரித்தானியா எமது மக்களுக்கு செய்ய வில்லை.
ஒதுக்கீட்டு செயற்திட்டம்
ஆகவே, கடந்த காலங்களில் இழந்துவிட்ட வளர்ச்சியை மீளப்பெறும், விசேட ஒதுக்கீட்டு செயற்திட்டத்தின் அடிப்படையில், இலங்கையின் மிகவும் பின்தங்கிய பிரிவினரான பெருந்தோட்டங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவிட முன்வருமாறு பிரிதானியாவை நான், இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய கட்சியின் தலைவர் என்ற முறையில் கோருகின்றேன்.
இன்று உங்களுக்கு பிரித்தானிய தூதுவர் அன்ரூ பெட்றிக் நடத்துகின்ற வரவேற்பு நிகழ்வுக்கு எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். நான் நாட்டில் இல்லாத காரணத்தால் அதில் கலந்துக்கொள்ள இயலாமல் இருப்பது அவருக்கு அறிவித்துள்ளேன்.
எமது கோரிக்கைள் தொடர்பில் இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதுவரிடம் தொடர்ந்தும் உரையாட உள்ளேன்”என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |