தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தோல்வியடைந்துள்ள அரசு : மனோ கணேசன்
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசு தோல்வியடைந்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) எம்.பி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (09.05.2024) அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
தொழிலாளர் மீதான தாக்குதல்
“தொழிலாளர் மீதான தாக்குதல் நடத்த கம்பனிகள் சுயேட்சை ஓய்வு திட்டத்தில் இராணுவத்தில் இருந்து வெளியேறும் முன்னாள் படை வீரர்களை கொண்டு கூலிப்படைகள் அமைத்துள்ளார்கள்.
அந்த கூலிப்படைகள் தொழிலாளர்களின் மீது வன்முறை பிரயோகம் செய்து தாக்குகின்றன. இரத்தினபுரி இங்கிரிய தும்பரை தோட்டம், கிரியெல்ல பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நேற்று முதல் நாள் நடந்துள்ளது.
இது பற்றி எங்கள் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பிரதான அமைப்பாளர் சந்திரகுமார் எனது கவனத்திற்கு நேற்று கொண்டு வந்தார்.
உடனடியாக நான் கிரியல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த பெரேராவுக்கு கடுமையாக இதுபற்றி பணிப்புரை விடுத்தேன். அதுவரை அசமந்தமாக இருந்த பொலிஸ் அதன் பின் தாக்குதல் நடத்திய நபர்களை தேட தொடங்கியது.
இந்த விடயத்தில் நான் தலையிட்ட பிறகு, சம்பந்தபட்ட சந்தேகநபர்களின் முகவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளி பெண்ணை தொடர்பு கொண்டு வழக்கை மீளப்பெறுமாறு வலியுறுத்தியுள்ளார்கள்.
நான் தொடர்ந்து நடவடிக்கை எடுத்த காரணத்தால் தற்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார்கள்.
இது தொடர்ந்து நடக்கிறது. கூலிப்படைகளை வைத்து தாக்குதல்கள் மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே நடக்கிறது.
ஒருபுறம் உரிய சம்பளம் இல்லை. மறுபுறம் வன்முறை. இது என்ன? அரசாங்கம் மலையக பெருந்தோட்ட மக்களின் சம்பளம் தொடர்பில் தோல்வி அடைந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |