நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்..!
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 2ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்திக்கான கோபுரங்கள் அமைத்தல் மற்றும், கனிம மணல் அகழ்வுக்கு எதிராக மன்னார் மக்கள் முன்னெடுக்கின்ற போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
குறித்த போராட்டம் தொடர்ச்சியாக 14ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் தொடர்ந்தும் மக்களின் நலனில் அக்கறை கொள்ளாத நிலையே இப்போராட்டங்களுக்கு காரணமாக உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் பொருளாதாரத்தை மேலோங்கச் செய்ய பல்வேறு பாரிய வேலைத்திட்டங்கள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் மன்னார் தீவைச் சுற்றி கடல் காணப்படுகின்றது. கடலை விட குறைவான அளவிலேயே மக்களின் குடியிறுப்புகள் மற்றும் நிலப்பரப்புக்கள் காணப்படுகின்றது.
மக்களின் வாழ்வியலையும், இருப்பையும் பாதிக்கின்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை மன்னார் தீவு மற்றும் பெரு நிலப்பரப்புகளில் முன்னெடுக்க வேண்டாம் என்பதே மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது.
காற்றாலை மின் கோபுரங்கள்
அந்தவகையில் மன்னார் தீவில் ஏற்கனவே காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தான் கடற்றொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்பதை தாம் உணர்ந்துள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்கள் காற்றாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் பிடிபட்ட மீன் தொகை தற்போது பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். காற்றாலை மின் கோபுர சக்கரங்களில் சிக்கி பறவைகள் இறந்துள்ள சம்பவங்கள் மன்னாரில் பதிவாகி உள்ளது.
இவ்வாறான பல்வேறு பிரச்சினைகளை மன்னார் மக்கள் முகம் கொடுத்து வருகின்ற நிலையில் மேலும் 2 ஆம் கட்ட காற்றாலைக்காக காற்றாலை மின்கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் தீவில் முன்னெடுக்கப்படவுள்ள 2 ஆம் கட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான காற்றாலை உபகரணங்கள் எடுத்து வர முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாகவே மன்னார் மக்கள் விழித்துக் கொண்டதுடன்,தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.
மன்னார் தள்ளாடி சந்தி மற்றும் மன்னார் நகர பகுதியில் மக்கள் தொடர்ச்சியாக இரவு பகல் பாராது போராட்டங்களை முன்னெடுத்து வந்தாலும்,பொலிஸாரின் பாதுகாப்புடன் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களின் வாழ் விடங்களில் காற்றாலை கோபுரங்கள் அமைக்க பொருட்கள் எடுத்து வரப்பட்டது. மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இளையோரும் ஒன்றினைந்து உள்ளனர்.
மக்களுக்கு ஆதரவாக பிரஜைகள் குழு,பொது அமைப்புக்கள்,கடற்றொழிலாளர்கள் அமைப்புகள்,வர்த்தகர்கள்,மத தலைவர்கள் அனைவரும் ஆதரவு வழங்கி ஓரணியாகியுள்ளனர்.
தொடர்ச்சியாக மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வந்த நிலையில் இறுதியாக ஒரு பேச்சுவார்த்தை ஜனாதிபதிக்கும், மன்னார் மாவட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
தொடர் போராட்டம்
முன் மொழியப்பட்ட மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள் அரச அதிகாரிகள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் பிரதிநிதிகளுடன் கடந்த புதன்கிழமை (13)மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
அதன் போது தற்போது நடைபெற்று வரும் 20 மெகா வோட் மற்றும் முன்மொழியப்பட்ட 50 மெகா வோட் திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
நாட்டின் பொருளாதாரத்தில் வலுசக்தி மிக முக்கியமான காரணி யாக இருப்பதால் அத்தகைய சூழ்நிலையில் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி எந்தவொரு திட்டத்திலும் அப்பகுதி மக்களின் கருத்துக்களை கேட்பதற்கும் அவர்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை வழங்கவும் அரசாங்கம் தயாராக உள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.
ஒரு முறையான கட்டமைப்பின் மூலம் நடைபெறும் கலந்துரையாடல்கள் ஊடாக ஒரு மாதத்திற்குள் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவும், அதுவரை குறித்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தவும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், இல்மனைட் படிவுகள் தொடர்பான பரிந்துரைகள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கைகளை நிறைவேற்றாமல் தொடர்ந்தும் செயல் படுத்தப்படாது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மன்னார் பகுதியில் வீதி அபிவிருத்தி மற்றும் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பான திட்டங்களுக்கு எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதையும், வட மாகாண மக்களின் காணி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொடர்புடைய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்பதையும், அதன் மூலம் விஞ்ஞான ரீதியான தீர்வைப் பெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.
கால அவகாசம்
ஜனாதிபதியின் ஒரு மாதகால அவகாசத்தை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.போராட்டம் சுழற்சி முறையில் இடம் பெற்று வருகிறது. நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த கால ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உரிய முறையில் நிறைவேற்றவில்லை.இதனால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை கருத்தில் கொண்டே எமக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை காற்றாலை மின் உற்பத்தி, கனிய அகழ்வு ஆகியவற்றிற்கு எதிரான தமது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன். எமது வேண்டுகைக்கு அமைவாக ஜனாதிபதி எங்களை சந்தித்து கலந்துரையாடினார். ஆரம்பத்தில் எந்த விடயங்களுக்கும் இணக்கம் காண முடியாத வகையில் அவர் உரையாடி இருந்தார்.
பின்னர் புள்ளி விவரங்களை எடுத்துக் கூறியதன் அடிப்படையில்,ஒரு மாத காலம் தற்காலிகமாக காற்றாலை செயல்திட்டத்தை இடை நிறுத்தி,குறித்த விடயம் தொடர்பாக ஆய்வு செய்யலாம் என அவர் தெரிவித்தார்.அவருடைய கருத்தின் பிரகாரம் நடைபெறுகின்ற 70 மெகாவாட் மின்சாரத்துக்கான வேலைத்திட்டத்தை அவர் நிறுத்துவதாக இல்லை.
நிறுத்தப் போவதும் இல்லை என்றுதான் எமக்கு தெரிகிறது. அதானிக்கு வழங்கப்படவுள்ள 53 இடங்களையும் நிறுத்த முடியும் என்பது அவரது நிலைப்பாடு.
ஜனாதிபதிக்கு பல விடையங்கள் அதிகாரிகளினால் தெளிவு படுத்தப்படவில்லை.குறிப்பாக கனிய மணல் அகழ்வு குறித்து ஜனாதிபதி எதுவித தகவலும் அறிந்திருக்கவில்லை.
குறித்த கனிய மணல் அகழ்வு இடம் பெறாது என தெரிவித்தார்.அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு உரிய தகவல்களை வழங்கி இருக்கவில்லை.நாங்கள் காற்றாலை யை நிறுத்த போராடுகின்றோம்.ஆனால் ஜனாதிபதியுடனான சந்திப்பில் அதற்கு எவ்வித வாய்ப்புகளும் இல்லை என்று தெரிகிறது.என அவர் தெரிவித்தார்.
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார். -ஜனாதிபதியுடனான சந்திப்பு சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.எனினும் மக்களுடன் கலந்துரையாடி நாங்கள் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.எமது போராட்டம் தொடரும்.எங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் பல கோணங்களில் முன்னெடுக்கப்படும். மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் அடிகளார்.
ஜனாதிபதியின் கருத்து
காற்றாலைக்கான ஆலோசனைகளும்,தீர்வும் எட்டப் பட்டதன் பின்னர் தான் கனிய மணல் குறித்து கலந்துரையாடப்படும் என கூறியுள்ளனர். ஜனாதிபதி எங்களிடம் நேரடியாக கூறியுள்ளார்.
அது தொடர்பாக தீர்க்கமாக கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். எது எவ்வாறாக இருந்தாலும் மன்னார் மக்களின் நிலைப்பாடுகளை அறித்து மக்களின் வாழ்வாதாரம்,இறுப்பிடம்,உரிமைகளுக்கு மதிப்பளித்து மக்களை எவ்வகையிலும் பாதிக்காத வகையில் அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போரினால் மன்னார் மக்களும் கடற்தொழிலாளர்களும், விவசாயிகளும் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர்.
உள்நாட்டுப் போர் முடிவடைந்த நிலையில் மக்களின் வாழ்வாதாரம் மக்களின் சுய முயற்சியால் முன்னேற்றம் காண்கின்றது. எனினும் மாறி மாறி வருகின்ற அரசாங்கம் தங்களின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச,மைத்திரிபால சிரிசேன,கோட்டாபாய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரது காலங்களில் மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தார்களோ அதே நிலைப்பாட்டில் தான் தற்போதைய அரசின் கால கட்டங்களிலும் மக்களின் மன நிலை அமைந்துள்ளது. -
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் காலத்தில் மன்னார் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் எத்தனை காலம் எடுக்கும் என்பது மக்களின் நிலைப்பாடாக உள்ளது.
யார் ஜனாதிபதியாக வந்தாலும் ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வியல் இருப்பிடங்களை அறிந்து அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதே சாலச் சிறந்ததொரு விடையமாக காணப்படும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Ashik அவரால் எழுதப்பட்டு, 17 August, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்தியாவிற்கு கலக்கம் தரும் தகவல்... நெருங்கிய நண்பரிடமிருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதம் வாங்கிய பாகிஸ்தான் News Lankasri
