மன்னார் - கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக பயிர்ச்செய்கைக்குரிய நீர் விநியோகம் ஆரம்பம்
மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக பயிர்ச்செய்கைக்குரிய நீர் விநியோகம் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நீர்ப்பாசன பணிப்பாளர் தா. திருவருட் செல்வன் தலைமையில் குறித்த நிகழ்வு நேற்று(27) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சர்மமத்தலைவர்கள் முருங்கன் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் இ. மதுராங்கன்,விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
நீர் விநியோகம் ஆரம்பம்
இவ்வருடம் சிறுபோகத்திற்காக 2,450 ஏக்கர் தெரிவு செய்யப் பட்டுள்ளன. இப்பயிர்ச்செய்கையானது 43 குளங்களில், அதாவது 6 பிரதான வாய்க்கால்களின் கீழ் உள்ள 43 குளப்பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.
கட்டுக்கரை குளத்தின் நீர் மட்டமானது 11 அடி 7 அங்குலமாக காணப்படுகிறது. தற்போது 2 அங்குல நீர் வான் பாய்கிறது.

குளத்தின் தற்போதைய கொள்ளளவு 30,982 ஏக்கர் அடி ஆகும். இந்த முறை சிறு போகச் செய்கைக்கு தேவையான நீர் போதுமான அளவில் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளங்களை புனரமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீர் விநியோகம் செய்வதற்கு தீர்மானிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



