பாதுகாப்பற்ற பண்ணைகளினால் வாழ்வாதாரத்தை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள இலுப்பை கடவை பகுதியில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடைமுறை இன்றி அமைக்கப்பட்டு பராமறிப்பு இன்றி காணப்படும் நண்டு, அட்டை வளர்ப்பு பண்ணைகளினால் பல்வேறு பிரச்சினைகளுக்கும், சுகாதார சீர்கேடுகளுக்கும் முகம் கொடுப்பதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மக்கள் குடியிருக்கும் பகுதியில் மிக ஆழமான குழிகள் தோண்டப்பட்டு வீடுகளின் எல்லைகளிலும் பின்பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள குறித்த பண்ணைகள், பண்ணைகளுக்கு நீர் பெற்றுக் கொள்ள வெட்டப்பட்ட பாதுகாப்பற்ற வாய்கால் காரணமாகவும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் அட்டை, நண்டு பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த பெண்கள் தமது வாழ்வாதார தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
இங்கு பண்ணை அமைக்கப்பட்டு பண்டுகள் அமைக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்து மழை நீர் கடலுடன் கலக்க முடியாத நிலையில் மக்கள் குடியிருப்புக்களில் புகுந்து பாரிய சேதங்களை ஏற்படுத்துவதாகவும் கடல் நீர் மற்றும் மழை நீர் ஒன்றாக சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் கடலுக்கு செல்லும் நடை பாதைகளை மறித்து பண்ணைகள் அமைக்கப்பட்டமையினால் பல கிலோமீற்றர்கள் சுற்றியே தற்போது கடலுக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதே நேரம் கடல் நீர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைவதனால் நன்னீர் உவர் நீராக மாறியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலளரிடம் தெரியப்படுத்தியும் இதுவரை சரியான பாதுகாப்பு நடவடிக்கையோ மாற்று நடவடிக்கையோ மேற்கொண்டு தரவில்லை எனவும் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வாறு மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இவ்வாறான பண்ணை அமைக்க அனுமதி வழங்கினார்கள்? எனவும், அவ்வாறு பண்ணையின் பாதுகாப்பு நடைமுறை பின் பற்றப்படாத நிலையில் ஏன் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெளிவுபடுத்த வேண்டும் எனவும் விரைவில் உரிய முறையில் பராமறிப்பற்ற வகையில் காணப்படும் பண்ணைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினவிய போது குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட பண்ணைகளுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது தொடர்பாக உரிய திணைக்களங்களுக்கு விளக்கம் கோரி கடித்தம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விபரங்கள் கிடைக்க பெற்ற பின்னர் மேலதிக நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில், செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் ஒன்றும் நேற்றைய தினம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




