மன்னார் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கும் நேரத்தில் மாற்றம் (photo)
மன்னார் மாவட்ட செயலாளர் ஸ்டான்லி டிமெளின் வழிநடத்தலில், மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் தலைமையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு எரிபொருள் அட்டையூடாக வழங்கப்பட்டு வரும் எரிபொருள் விநியோக நடவடிக்கை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு இன்று காலை முதல் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதற்கு அமைவாக காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேர மாற்றத்துக்கான காரணங்கள்
நடைமுறைப்படுத்தப்படும் மின் தடை அறிவிப்புக்கு அமைவாகவும், மன்னார் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் உள்ள எரிபொருள் விநியோக இயந்திரத்தில் அடிக்கடி ஏற்படுகின்ற தடங்கல்களை கருத்தில் கொண்டும் குறித்த நேரங்களில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே குறித்த கிராம மக்கள் ஒதுக்கப்பட்ட நேரங்களில் வருகை தந்து இடையூறுகள் இன்றி எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.



