மன்னாரில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த விசேட நடவடிக்கை
மனிதாபிமான அபிவிருத்திக்கான அமைப்பு, GIZ நிறுவனத்தின் நிதியுதவியுடன் பேசாலை மற்றும் தலைமன்னார் கிராமங்களில் உள்ள 60 பெண் தலைமைத்துவக் குடும்பங்களினதும், 15 மாற்று வலுவுள்ள இளையோரினதும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பயனாளிகள் தெரிவு செய்து அவர்களுக்கு சுய தொழில் முயற்சி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வலுபடுத்தல் பயிற்சிகளையும், சூரிய ஒளி மூலம் கருவாடு உலர்த்தி களையும் வழங்கியுள்ளனர்.
இதனால் சுத்தமான, தரமான, ஆரோக்கியமான கருவாடுகளை உற்பத்தி செய்து, உயர்தர பொதியிடல் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் வாய்ப்புக்களைப் பெற்றுள்ளனர்.
அத்துடன், மன்னார் நகர பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 15 மாற்று வலு உள்ளவர்களுக்கான வீட்டு மின் பாவனைப் பொருட்களை திருத்தும் பயிற்சி நெறியானது வவுனியா தொழிற்பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இச்செயற்பாடுகள் அனைத்தும் மன்னார் நகர பிரதேச செயலகம், கைத்தொழில் அதிகார சபை, சமூக சேவைகள் திணைக்களம் என்பவற்றின் ஒத்துழைப்புடன் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



