மக்கள் காணிகள் தற்போது வனஜீவராசிகள் மற்றும் வன பரிபாலனத் திணைக்களங்களிடம் இருப்பதாக குற்றச்சாட்டு
அதிகாரத்தில் இருக்கும் போது நாம் மக்களுக்கு வழங்கிய ஆயிரக்கணக்கான காணிகள் இன்று வனஜீவராசிகள் மற்றும் வன பரிபாலனத் திணைக்களங்கள் ஆகியவற்றினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மன்னார் முசலி வை.எம்.எம்.எ கிளையின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை (26.08.2023) முசலி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முசலிப் பாடசாலையை தேசிய பாடசாலையாக ஆக்க வேண்டுமென நாங்கள் பகீரத முயற்சிகள் எடுத்தபோது, மாணவர்களின் வரவு குறைவாகவே இருந்தது.
முசலி பாடசாலை
எனினும், அமைச்சரவைக்கு விஷேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்தே அதில் நாம் வெற்றிப்பெற்றோம்.அப்போது தேசிய ரீதியில் மூன்று பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன.அதில் முசலியும் ஒன்று.
நான் அமைச்சராக இருந்த போது, முசலிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை மக்களுக்கு வழங்கியதால், வில்பத்துவை அழிப்பதாக என்மீது போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நீதிமன்றம் வரை சென்றது.
வேறு மாவட்டத்தில் மரம் நட வேண்டும் என எனக்கெதிராக தீர்ப்பும் வந்தது. 1100 மில்லியன் ரூபாய்க்கு மரம் நட்டு, பத்து வருடங்களுக்கு அதை பராமரிக்கும் செலவுடன், மொத்தமாக 116 கோடி ரூபா செலுத்த வேண்டுமென தீர்ப்பு வந்தது.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக நான் மேன்முறையீடு செய்துள்ளேன். அது குறித்த வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. நான் அமைச்சராக இருந்த காலத்தில், முசலிப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கட்டடங்களைப் பார்க்கும்போது, உண்மையில் எனக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கின்றது.
கண்ணிவெடி அபாயம் இருந்த பிரதேசம்
எனக்கு அந்த சக்தியை தந்த இறைவனுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி செலுத்துகின்றேன். நாங்கள் இந்தப் பிரதேசத்துக்குள் நுழையும் போது, நான்காம் கட்டையிலிருந்து சிலாவத்துறை வரை எங்குமே காடாகவே இருந்தது. மொத்தத்தில் முசலிப் பிரதேசம் முழுவதுமே வனாந்திரமாக காணப்பட்டது.
நாங்கள் கால் வைக்கும்போது “கண்ணிவெடி அபாயம் இருக்கின்றது. கால்வைக்க வேண்டாம்” என பொலிஸார் எச்சரித்தனர். ‘பாலைக்குளிக்கு செல்ல வேண்டாம்’ என பொலிஸார் அறிவுறுத்தினர்.
இந்தப் பிரதேசத்தில் அநேகமான இடங்களில் குடியேற்றம் நடந்த பின்னர் இறுதியாகவே கொண்டச்சியில் மக்களை குடியேற்றினோம். கொண்டச்சி கிராமத்தில் உள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்ற விஷேட வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கி, எமது சொந்த நிதியில் கண்ணிவெடிகளை அகற்றி, மக்களை மீள்குடியேற்றினோம்.
சர்வதேச நிறுவனங்கள் பல இருந்த போதும், அவர்கள் கண்ணிவெடிகளை அகற்ற உதவி செய்யவில்லை. காணிகளை அபகரிக்கும் எண்ணமே அவர்களிடம் இருந்தது.
புதிய பாடசாலைகளை உருவாக்கினோம், ஆசிரிய நியமனங்களை வழங்கினோம், சதிகளுக்கும் தடைகளுக்கும் பின்னாலேயே இந்தப் பணிகளில் வெற்றி பெற்றோம்.
காணி பிரச்சினை
கடந்த 3, 4 வருடங்களாக நாம் மிகவும் அமைதியாக இருக்கின்றோம். எவராவது இந்தப் பணிகளை தொடரவேண்டுமெனவே விரும்புகின்றோம். எனினும், நாம் வழங்கிய காணிகளில் பல ஏக்கர்கள் இன்று வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளன.
இவற்றைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை. பார்ப்பாரும் கேட்பாரும் அற்ற சமூகமாகவே இந்தப் பிரதேச மக்கள் வாழ்கின்றனர். அண்மையில் இடம்பெற்ற மன்னார் கூட்டத்தில், முசலிப் பிரதேசத்தில் ஒரு துண்டுக்காணியையேனும் விடுவிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்படவில்லை.
இந்த நியாயத்தை நாம் தெரிவித்த போது, கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் 27ஆம் திகதி இதற்கென ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதைப்பற்றி பேசுவோம் என உறுதியளித்தனர்.
ஆனால், அவ்வாறு முடிவு எடுக்கப்பட்ட போதும் இங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் தலைமறைவாகிவிட்டனர். இதுதான் இன்றைய நிலை.
முசலியில் உள்ள கல்விமான்களும் ஊர்மக்களும் இது தொடர்பில் பேச வேண்டும். இவற்றைத் தட்டிக் கேட்க வேண்டும். நிலத்துக்காகவே வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் நடைபெற்றன.
1990ஆம் ஆண்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபோது, 15 சதவீதக் காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமாக இருந்தது, இன்று நாங்கள் மக்களுக்குக் கொடுத்த காணிகளைக் கூட மீண்டும் வர்த்தமானியின் மூலம் கையகப்படுத்தியுள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் 15 சதவீதமான காணிகளே மக்களுக்கு இருக்கின்றது. எஞ்சிய எல்லாவற்றையும் வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்து வைத்திருக்கின்றது. ஆனால், சிலர் இவற்றை எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
பிரதேச செயலாளர் இந்த அநியாயங்களை தொடர்ந்தும் செய்துகொண்டிருக்காமல், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் அமைதியான முறையில், ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாவோம் என்பதை ஆணித்தனமாக தெரிவித்துக் கொள்கின்றேன்.
உள்ளூர் அதிகாரிகளின் நிர்வாகக்கெடுபிடிகளால்தான் நமக்கு கஷ்டங்கள் தொடர்கின்றது என்ற உண்மையை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |