இலங்கை மழைநீர் சேகரிப்பு அமையத்தால் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான விவாத போட்டியின் இறுதி நிகழ்வு
இலங்கை மழைநீர் சேகரிப்பு அமையத்தால் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான விவாத போட்டியின் இறுதி நிகழ்வானது மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்றைய தினம்(28) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடி நீரை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இறுதி விவாதப்போட்டி
அந்த வகையில் தற்போது இலங்கையில் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படும் பிரதேச மக்களுக்கான சுத்தமான குடி நீரை பெற்றுக் கொடுத்தல் என்னும் செயற்றிட்டத்தின் கீழ் USAID இன் அனுசரணையுடன் இயங்கி வருகிறது.
அதற்கமைவாக வடமாகாணத்தின் மன்னார் மாவட்டங்களிலிருந்து மழைநீர் சேகரிப்பு தாங்கிகள் மூலம் பயனடைந்த பாடசாலை மாணவர்கள் இந்த விவாத போட்டியில் பங்குபற்றியுள்ளனர்.
இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் முதலாவது மற்றும் இரண்டாவது சுற்றில் பங்குபற்றி தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விவாத போட்டியின் இறுதி விவாதப்போட்டி நேற்றைய தினம் (28) இடம்பெற்றுள்ளது.
குறித்த இறுதி விவாதப்போட்டி நீர் பற்றாக்குறை நிலவும் கிராமப்புறங்களில் மழைநீர் சேகரிப்பு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த ஏற்படும் செலவில் அரசாங்கத்தின் பங்களிப்பு (மானியம்) போதுமானதாக உள்ளது /இல்லை எனும் தலைப்பில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பிரதி மாவட்ட செயலாளர், மன்னார் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உத்தியோகத்தர்கள், USAID இன் செயற்திட்ட இணைப்பாளர், இலங்கை மழைநீர் சேகரிப்பு ஒன்றிய உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பல அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன், இறுதி சுற்று போட்டியில் பங்குபற்றி மன்/ பரிகாரி கண்டல் அ.த.க.பா முதலாம் இடத்தையும் மன்/ கட்டையடம்பன் றோ.க.த.க.பா இரண்டாம் இடத்தையும் மன்/ தலைமன்னார் அ.த.க.பா மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.