மதுபான போத்தல்கள் தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம்
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களில் உற்பத்தித் திகதி அச்சிடல் கட்டாயமானது என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் யூ.எல். உதயகுமார பெரேரா அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுபான தயாரிப்பாளர்களும் மதுபான போத்தல்களின் மூடியின் கீழும் ஒட்டப்பட்ட லேபிளின் மேலும் உற்பத்தி திகதியை அச்சிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்டிக்கர் தொடர்பாக நம்பிக்கையில்லா நிலைமையே இந்த புதிய நடைமுறை மூலம் வெளிப்படுவதாக மதுவரித் திணைக்கள தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பெருந்தொகை அந்நிய செலாவணியை செலவிட்டு பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் போத்தல்களில் உற்பத்தி திகதியை அச்சிடுமாறு பணிப்புரை விடுத்துள்ளமை பாதுகாப்பு ஸ்டிக்கர் நடைமுறையின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளன.
நாடாளுமன்றினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பாதுகாப்பு அடையாள முறைமையை மீறுவதற்கு மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கு உரிமை கிடையாது என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பு திகதியைக் அச்சிடுவதற்கு, மதுபான உற்பத்தியாளர்கள் அதிகளவு செலவிட நேரிடும் என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
