மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம்
இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் நேற்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை ஒத்ததாக கருதப்படும் மண்டூர் கந்தசாமி ஆலயத்தின் பூசைமுறைகள் கதிர்காமத்தினை ஒத்ததாக நடைபெற்றுவருகின்றது. கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21தினங்கள் ஆலய உற்சவம் நடைபெற்றுவந்தன.
உலகிலேயே முருக வழிபாட்டில் தனித்துவமான முறையினையும் மிகவும் பழமையான வழிபாட்டு முறையினையும் கொண்டதாக பூஜை முறைகளும் ஆலய நடைமுறைகளும் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் உள்ளது.
நேற்று காலை விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் வேல்தாங்கிய பேழைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பேழைக்கு ஆலயத்தினுள் சிறுமி ஒருவரும் தீபம் காட்டி வழிபாடுகளை முன்னெடுத்த பின்னரே பேழையானது தீர்த்தக்கரை நோக்கி கொண்டு செல்லப்பட்டது.
பெருமளவான பக்தர்கள் அடியார்கள் புடைசூழ மட்டக்களப்பு வாவிக்கு அருகில் உள்ள தீர்த்தக்கேணிக்கு முருகனின் வேல்தாங்கிய பேழை கொண்டுவரப்பட்டது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன் தலைமையில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
தீர்த்தோற்சவம் நிறைவடைந்ததும் ஆலயத்திற்கு முருகப்பெருமானின் பேழை கொண்டுவரப்படும்போது தெய்வானையம்மன் ஆலயத்திற்கு முன்பாக சிறுமிகள் தீப ஆராதனை செய்யும் நிகழ்வு நடைபெறும்போது சிறுமிகள் மற்றும் வில்அம்பு தாங்கி வரும் சிறுவன் மயங்கிவிழும் அற்புத நிகழ்வு காலம்காலமாக நடைபெற்றுவருகின்றது.
மயங்கிய சிறுமிகள் வள்ளியம்மன் ஆலயத்திற்கு பிற்புறமாக கொண்டுசெல்லப்பட்டு முருகப்பெருமானின் வேல் வள்ளியம்மன் ஆலயத்திற்குள் வைக்கப்பட்டது. இதன்போது வள்ளியமனுக்கு தீர்த்தம் தெளிக்கும் சமயத்தில் மயங்கிய பிள்ளைகள் மயக்கம் தெளிந்து எழும் அற்புத காட்சியும் இடம்பெற்றது.