10 பேரின் உயிரை பறித்த கோர விபத்து - பேருந்து ஆற்றில் விழுந்தமைக்கான காரணம் வெளியானது
மன்னப்பிட்டியில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானமை குறித்து நாடு பூராகவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சாரதியின் கவனயீனம், பணத்திற்காக அனுமதிக்கும் பொலிஸார், பேருந்தினை பரிசோதிக்காத அதிகாரிகள் என பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கதுருவலையில் இருந்து பத்து நிமிடங்கள் பயணித்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
பேருந்து மிகவும் வேகமாக சென்றமையினால் பேருந்திலுள்ள பிரதான பாகம் ஒன்று உடைந்தமையினாலேயே பேருந்து ஆற்றில் வீழ்ந்ததாக முதற்கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
பேருந்து அதிவேகமாக பயணித்த போது வீதியில் குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த நிலையில் பேருந்து பாலத்திற்கு அருகில் பேருந்தின் பாகம் உடைந்தமையினால் பேருந்து மேல்நோக்கி பயணித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாகம் உடைந்த பேருந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பாலத்தில் இருந்து ஓடையில் விழுந்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதுடன் மோட்டார் பரிசோதகரும் விசாரணைகளை மேற்கொள்வார் என பொலன்னறுவை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
பேருந்தை அஜாக்கிரதையாக அதிவேகமாக செலுத்தியதாலேயே விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சாரதி சந்திவெளியைச் சேர்ந்த நடராஜா வினோத் ராஜ் என்பவரை நேற்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் பாத்திமா வின்னா உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |