லண்டனில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு - 20 வயது இளைஞர் பலி
தெற்கு லண்டனில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் 20 வயதுடையவர் எனவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு ஸ்ட்ரீதம் ஹில்லில் உள்ள கிர்க்ஸ்டால் கார்டன்ஸில் கார் ஒன்றை துரத்திச் சென்ற பொலிஸார் பின்னர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் சந்தேகநபர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயற்சி
அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயற்சிகள் நடந்து வருவதாகவும், பொலிஸ் கண்காணிப்பு குழு விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியின் வீதிகள் மூடப்பட்டுள்ளன. சாட்சியங்களை சேகரிக்க புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த பயங்கரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அனுதாபங்கனை தெரிவித்துக்கொள்வதாக பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசையாமல் நின்ற கார்
அருகிலுள்ள நியூ பார்க் சாலையில் வசிக்கும் 39 வயது நபர் ஒருவர், கிர்க்ஸ்டால் கார்டனுக்குத் திரும்புவதற்கு முன் கார் அவரது தெருவில் சென்றதாகக் கூறினார்.
கிர்க்ஸ்டால் கார்டன்ஸில் ஒரு பொலிஸ் கார் வந்து அவர் மீது மோதியது. அவருக்குப் பின்னால் மற்றொரு பொலிஸ் கார் வந்தது, அவர்கள் அவரை கிர்க்ஸ்டால் கார்டனின் முடிவில் அடைத்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது கார் அசையாமல் இருந்தது. இதன் போது மிகவும் சத்தமாக இருந்தது என சம்பவத்தை நேரில் பார்த்த அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.