இரவு வேளையில் பெண்ணை சந்தித்த குடும்பஸ்தர் படுகொலை - கொலையாளி தப்பியோட்டம்
மாவனல்லை, கடாப்பகந்தஹேன பகுதியில் கூரிய ஆயுதத்தால் கழுத்தில் குத்தப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 29 ஆம் திகதி இரவு, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 42 வயதான பிரதீப் தில்ஷான் ஜயரத்ன என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளை மாவனல்லை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
பொலிஸ் விசாரணைகளுக்கு அமைய, உயிரிழந்த நபர் கல்அத்தர பிரதேசத்திலிருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பெண் ஒருவரை சந்தித்துள்ளார்.

இரவு 8.45 மணியளவில் வீதியின் ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த சந்தேகநபர், குறித்த நபரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
காயங்களுடன் சென்ற நபரை பிரதேசவாசிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட நபருக்கும், சந்தேகநபரின் மனைவிக்கும் இடையே நீண்டகாலமாக நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது.
கொலையாளி தப்பியோட்டம்
இதன் காரணமாக ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தின் பின்னர் பிரதேசத்தில் இருந்து தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் பெரிய அளவிலான இரத்தக் கறைகள், காலணிகள், மோட்டார் சைக்கிள் மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.