லண்டனில் தமிழர் ஒருவரின் மோசமான செயல்! - ஆறு மாதம் சிறை தண்டனை விதிப்பு
லண்டன் - கிங்ஸ்பரி பகுதியில் மதுபோதையில் பொலிஸார் இருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த தமிழர் ஒருவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 58 வயதான தெய்வேந்திரம் பாலகுமார் என்பவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை எட்டி உதைத்ததுடன், மற்றொருவரின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளார்.
எவ்வாறாயினும், இதன் போது தெய்வேந்திரம் பாலகுமார் போதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரின்ஸெஸ் அவென்யூவில் ஒருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த நபரை எழுப்புவதற்கு முயற்சித்துள்ளனர்.
இதன்போது பொலிஸ் அதிகாரிகள் மீது தெய்வேந்திரம் பாலகுமார் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
விசாரணையின் போது அவருக்கு நிலையான முகவரி இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீதான வழக்கு வில்லெஸ்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது.
எனினும், அவர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார். இந்நிலையில், கடந்த 6ம் திகதி அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.