புத்தளத்தில் இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் ஒருவர் கைது
புத்தளம் (Puttalam) பாலாவிப் பகுதியில் இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் புத்தளம் பிராந்திய பொலிஸ் பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலம்புரிச்சங்குகளை ஹோட்டல் உரிமையாளர் ஒருவருக்கு விற்பனை செய்ய உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்குக் (Nalaha Sliva) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே நேற்று (04.05.2024) மாலை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர்
வரக்காப்பொல பகுதியிலிருந்து இணையத்தளத்தில் முன்பதிவு செய்து வருகைத் தருமாறு கோரியும் குறித்த முச்சக்கரவண்டிக்கு தாம் பணம் செலுத்துவதாகக் கூறி பொலிஸாரால் சந்தேகநபர் வரவழைக்கப்பட்டுள்ள நிலையிலேயே வலம்புரிச் சங்குகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கரவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் எனவும் ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிவதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட இரண்டு வலம்புரிகளும் தலா 88 கிராம் மற்றும் 99 கிராம் எடையுள்ளதோடு, சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட வலம்புரிச் சங்குகளையும்
புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக புத்தளம் பிராந்திய பொலிஸ்
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |