புதுக்குடியிருப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: இருவர் தப்பியோட்டம்
புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்றையதினம் (23) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் விசாரணை
இதனையடுத்து, இன்றையதினம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதுடன் 330 லீற்றர் கோடாவும், 20 லீற்றர் கசிப்பும், கசிப்பு விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட பெறுமதியான மோட்டார் சைக்கிளும், இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், இரண்டு சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா
இதேவேளை, வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் 30 போத்தல் கசிப்புடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நேற்று முன்தினம் (22.04) இரவு வீடொன்றை சோதனை செய்த பொலிசார் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 போத்தல் சட்டவிரோத சாராயத்தை கைப்பற்றினர்.
அதனை உடமையில் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் 48 வயதுடைய நபர் ஒருவரை பொலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் அவரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |